Wednesday, April 1, 2026

இலங்கையின் பதுளையில் 165 பள்ளிகள் சேதமடைந்துள்ளன, 27 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன.

0 comments

பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ளாத பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இம்மாவட்டத்திலுள்ள 601 பாடசாலைகளில் 165 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 27 பாடசாலைகள் அபாய நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்த பின்னரே அவற்றை மீள ஆரம்பிக்க முடியும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளையில் திங்கட்கிழமை (15-12-2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 26 914 குடும்பங்களைச் சேர்ந்த 91 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆகவும் காணப்படுகிறது. 6038 குடும்பங்களைச் சேர்ந்த 18 232 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5897 குடும்பங்களைச் சேர்ந்த 21 492 பேர் வீடுகளை இழந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். 596 வீடுகள் முழுமையாகவும், 8075 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குடி நீர் விநியோகம் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், சுமார் 5000 மின்சார பாவனையாளர்களுக்கு மாத்திரம் மின்சாரத்தை மீள் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவையும் சீராக்கப்படும். சேதமடைந்திருந்த 25 பிரதான வீதிகளில் 24 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரேயொரு வீதி மாத்திரம் பாலம் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் 174 சிறு வீதிகளில் 166 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதைகளில் 335 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அவற்றில் தற்போது 324 பேரூந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவை தவரி 614 தனியார் பேரூந்துகளில் 599 பேரூந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுகின்றன. பதுளையில் வைத்தியசாலைகள் உள்ளிட்ட மருத்துவ நிலையங்கள் 14 அனர்த்தங்களால் சேதமடைந்தன. எனினும் மூன்று நாட்களில் அவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 5040 குடும்பங்களுக்கு 25 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 1260 இலட்சம் ரூபா பதுளை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்த தொகையை வழங்க முடியும் என்று நம்புகின்றோம். வீடுகளில் சேதமடைந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 50 000 ரூபா விரைவில் வழங்கப்படும்.

அதேவேளை பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அனர்த்தங்களை எதிர்கொள்ளாத பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. பதுளை மாவட்டத்திலுள்ள 601 பாடசாலைகளில் 165 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 27 பாடசாலைகள் அபாய நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்த பின்னரே அவற்றை மீள ஆரம்பிக்க முடியும் என்றார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00