Wednesday, April 1, 2026

ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – இலங்கை செய்தித்தாள் ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

0 comments

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அண்மையில் பதிவான இரு சம்பவங்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்க்ம, ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையிலான சம்பவங்கள் எதிர்வருங்காலங்களில் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தின்மீது எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதமாக அண்மையில் பதிவான இரு சம்பவங்கள் தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

முதலாவது சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ‘அருண’ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி போலியானது எனக்கூறி, அதுகுறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அப்பத்திரிகையின் ஆசிரியர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

இருப்பினும் இதுகுறித்து அவருக்கு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில், இந்த முறைப்பாட்டை அளித்தது யார் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

அதேபோன்று இரண்டாவது சம்பவம், ஜனாதிபதியை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தான் பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகலவினால் கூறப்பட்ட கருத்தாகும். இது பேரனர்த்த சூழ்நிலையில் பிறப்பிக்கப்படும் அவசரகால உத்தரவு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்காகப் பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்துக்கு முற்றிலும் முரணானதாகும்.

பிரதியமைச்சரின் இந்தக் கருத்தானது ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராக அவசரகால வழிகாட்டல்களின்கீழ் குற்றவியல் நடவடிக்கைளை எடுக்கலாம் என்ற மிகப்பாரதூரமான கருத்தை பொலிஸார் மத்தியில் விதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இவ்விரு சம்பவங்களையும் நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையிலான இவ்வாறான சம்பவங்கள் எதிர்வருங்காலங்களில் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00