Friday, April 3, 2026

இலங்கையில் பணியாளரின் நிர்வாண வீடியோவை பதிவேற்றியதற்காக பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

0 comments

தனது வீட்டில் பணிபுரிந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்ணின் ஆடையைக் களைந்து ஏனைய பணியாளர்கள் முன்பாக நிர்வாணப்படுத்தி அநாகரிகமாக நடந்துகொண்டது மாத்திரமல்லாது, அதைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரபல வர்த்தகர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பகிரப்பட்டு வந்த குறித்த காணொளி தொடர்பில், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொரளை, ஃபெயார்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குறித்த வர்த்தகர், இச்சம்பவத்தின் பின்னர் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காகப் பல ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் இந்த வழக்குத் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்ததுடன், சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையினையும் பெற்றிருந்தனர். இந்நிலையில், சந்தேகநபர் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்குடன் ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது ஞாயிற்றுக்கிழமை (18) அன்று கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் பொலிஸாருக்குச் சாட்சியங்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வர்த்தகரின் வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த ஏனையவர்கள் முன்னிலையில் அவர் இழிவுபடுத்தப்பட்டு, அநாகரிகமாக நிர்வாணப்படுத்தப்பட்டமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00