இந்திய மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்திற்கான வெளிநாட்டு உதவி நிதியை பாதியாக குறைத்து இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, இந்தியா – 01 பிப்ரவரி 2026
மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்திற்கான வெளிநாட்டு உதவி நிதியை பாதியாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களை வங்கதேச அரசு தடுக்கத் தவறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு உதவி நிதியை ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தன்னுடைய 9வது பட்ஜெட்டிலும் இந்த உதவி நிதி ஒதுக்கப்பட்டது. பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வங்கதேசத்திற்கான உதவி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், வங்கதேசத்திற்கான நிதியை பாதியாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆண்டுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடியில், பதற்றமான சூழல் காரணமாக ரூ. 34.48 கோடி மட்டுமே செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி ரூ. 5,686 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூட்டான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பூட்டானுக்கு ரூ. 2,289 கோடியும், நேபாளத்திற்கு ரூ. 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு ரூ. 400 கோடி மாலத்தீவுக்கான நிதி 8% குறைக்கப்பட்டு ரூ. 550 கோடியாக உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மியான்மருக்கு ரூ. 300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ. 225 கோடியும், லத்தீன் அமெரிக்காவுக்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு உயர்த்தி ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஈரான் நாட்டில் உள்ள சாபஹார் துறைமுகத் திட்டத்திற்கு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் மிக முக்கியமான திட்டமாக இது இருந்தாலும், தற்போதைய அமெரிக்க அரசியல் சூழல் இதற்கு தடையாக உள்ளது. எனவே, சாபஹார் துறைமுக திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.