தேசிய கல்வி நிருவகம் தற்போது முதலாம் தரத்துக்கு ஆரம்பித்திருக்கும் பாடத்தொகுப்பு இரண்டாம் தவணைக்கு இன்னும் அச்சிடப்படவில்லை. ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் அரசாங்கம், தற்போது அதனை நியாயப்படுத்த நாடுபூராகவும் கூட்டங்களை நடத்தி வருகிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (01-02-2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை அரசாங்கம் தனிக்கட்சியாகவே மேற்கொண்டுவருகிறது. அத்துடன் இந்த கல்வி மறுசீரமைப்பு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஷ் ஆகியோர் முன்னெடுத்த மறுசீரமைப்பின் தொடர்ச்சியாகும் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்திருந்தார்.
ரணில் கோட்ட காலத்தில் இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பானது, கல்வியை தனியார் மயமாக்கும் மறுசீரமைப்பாகும். இந்த மறுசீரமைப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தற்போது அதனையே முன்னெடுத்துச்செல்கிறார்கள்.
கல்வி மறுசீரமைப்பு மேற்காெள்ளும்போது கண்ணங்கரா கொள்கையை பின்பற்றுமாறே தெரிவிக்கிறோம். அதாவது கல்வியில் சமமான சந்தர்ப்பம், பெற்றோர்களின் வருமானத்துக்கமைய கல்வியை வித்தியாசப்படுத்தாமை போன்ற விடயங்களையே மறுசீரமைப்பின்போது முன்னெடுத்துச்செல்லுமாறு தெரிவிக்கிறோம்.
அப்போதுதாக் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களுக்கு சமமான கல்வி கிடைக்கிறது. ஆனால் தற்போதுள்ள மறுசீரமைப்பு, வளங்கள் இருக்கும் பாடசாலைகள் கல்வி நடவடிக்கையை முறையாக முன்னெடுத்துச்செல் முடியுமானவகையிலும் வளங்கள் குறைவாக இருக்கும் பாடசாலைகள், இருப்பதைக்கொண்டு செயற்பட வேண்டும் என்பதுபோலவே அமையப்பெற்றிருக்கிறது. அவ்வாறு இருக்க முடியாது என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.
அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்தாகும். நாங்கள் எதிர்பார்ப்பது, உண்மையான, கல்வி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய மறுசீமைப்பாகும். இந்த மறுசீரமைபில் எந்த தீர்வும் இல்லை. மேலதுக வகுப்பு மாபியாவுக்கு இதில் என்ன தீர்வு இருக்கிறது என கேட்கிறோம். பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு என்ன? இந்த கல்வி மறுசீரமைப்பில் மும்மொழிக் கல்வியை பலப்படுத்த இருக்கும் பிரேரணைகள் என்ன?
அதனால் அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கல்வு மறுசீரமைப்பானது ஏற்கனவே இருந்த மறுசீரமைப்பின் தொடராவே நாங்கள் காண்கிறோம். நாட்டில் தற்போது கல்வித்துறையில் இருந்துவரும் பிரச்சினைக்கு எந்த தீர்வும் இல்லை. அதனாலே அனைவருடன் கலந்துரையாடி, கல்வித்துறையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வை வழங்கக்கூடிய மறுசீமைப்பை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் தெரிவிக்கிறோம்.
அதேநேரம் அரசாங்கம் பாடத்தொகுப்பு முறையை அறிமுகப்படுத்தி, நாட்டில் முதற்தடவையாக செயற்பாட்டு கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் எமது நாட்டில் செயற்பாட்டு கல்வி முறையை பிரேரித்தது 1972 கல்வி மறுசீரமைப்பிலாகும். 1998 ஆரம்ப பிரிவு கல்வி மறுசீரமைப்பின்போதே அமர்ந்திருந்து கல்வி பயில்வதை குறைத்து, செயற்பாடு கல்வியை அதிகரித்தது.அதனால் இது புதிய விடயமல்ல. அதேநேரம் பாடத்தொகுப்பு மூலம் மாணவர்களுக்கு கல்வியை வழங்க முடியாது என கல்வியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதனால் இது விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
அதேநேரம் தேசிய கல்வி நிருவகம் தற்போது முதலாம் தரத்துக்கு ஆரம்பித்திருக்கும் பாடத்தொகுப்பு இரண்டாம் தவணைக்கு இன்னும் அச்சிடப்படவில்லை. ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படவும் இல்லை. அதனால் பூரணப்படுத்தப்படாத கல்வி மறுசீமைப்பே தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 6ஆம் வகுப்புக்கான கல்வி மற்சீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தால், பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.
அத்துடன் அடுத்த வருடம் தரம் 6, 7 ஆம் வகுப்புகளை ஒன்றாக மேற்கொள்வதா இல்லை என எந்த தயார் படுத்தலும் இல்லை. எனவே கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் அரசாங்கம், தற்போது அதனை நியாயப்படுத்த நாடுபூராகவும் கூட்டங்களை நடத்தி வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். அதனால் கல்வி மறுசீரமைப்புடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்த மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார்.