நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, இலங்கை – பிப்ரவரி 13, 2026
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும்.சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொரளையில் உள்ள என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (12-02-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு மாற்றீடாக நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு மிகவும் மோசமானது.இந்த வரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் பொதுமக்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு விரிவான வரைவிலக்கணம் அளிக்கப்பட்டுள்ளது. இது தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கு மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
13 சாதாரண குற்றங்கள் இந்த சட்டவரைவில் பயங்கரவாதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிமன்ற தடுப்புக்காவலில் உள்ள ஒருவரை நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அளிக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஜனாதிபதிக்கும் வரையறையற்ற வகையில் அதிகாரங்களை வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது எண்ணப்படி அமைப்புக்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கலாம். அதேபோல் பொது இடங்களையும் ‘ தடை செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவிக்கலாம். தடை நீக்கும் காலத்தை ஜனாதிபதியே அவரது தற்றுணிவின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும்.
ஜனாதிபதியால் தடை செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பகுதியை அல்லது இடத்தை ஊடகவியலாளர்கள் அறிக்கையிட்டால் 3 வருட கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாகுவார்கள். அல்லது 30 இலட்சம் ரூபா தண்டப்பண செலுத்தலுக்கு உள்ளாகுவார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தை இயற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் ஜனநாயகத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் துரதிஷ்டமான சட்டவரைவை வெளியிட்டுள்ளது. இந்த சட்டவரைவு, சட்டமூலமாக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவுடன், சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என்றார்.