மக்கள் ஆணை என்பது மாற்றமடையும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – முஜிபுர் ரஹ்மான்

by Amizhthu

அரசாங்கம் தங்களுக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆணையை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியை அடக்க இடமளிக்கப்போவதில்லை. மக்கள் ஆணை என்பது கல்லில் எழுதப்பட்ட ஒன்று அல்ல. அது மாற்றமடையும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன் கிழமை (18-02-2026) இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சபை முதல்வர் எப்போதும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினரை அடக்கும் வகையில், எங்களை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். 2005இல் மஹிந்த சிந்தனையை எழுதியது பிமல் ரத்நாயக்கவாகும்.

மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வாக்களித்து அவரை அதிகாரத்துக்கு கொண்டுவர பாடுபட்டதும் இவர்களாகும். தற்போது அவர் எங்களை விமர்சித்து வருகிறார்.

அதேபோன்று பாராளுமன்ற சம்பிரதாயம் தொடர்பில் சபை முதல்வர் கதைக்கிறார். ஆனால் இந்த பாராளுமன்றத்துக்கு தீ மூட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டியது பிமல் ரத்நாயக்கவாகும். அதேபோன்று பாராளுமன்ற நடவடிக்கையை உரிய நேரத்துக்கு முடிக்காமல் நேரத்தை அதிகரித்துக்கொண்டு எதிர்க்கட்சிக்கு ஏசுவதே சபை முதல்வர் கடைப்பிடித்து வருகிறார்.

அத்துடன் புகையிரத சாரதிகள் பணி பகிஷ்கரிப்புக்கு செல்ல முற்பட்டதால் பாடசாலை மாணவர்கள் அசெளகரியங்களுக்கு ஆளாகியதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் சபை முதல்வர் குறிப்பிடுகிறார்.

ஆனால் 88, 89 காலப்பகுதியில் பாடசாலை மணவர்களை வித்திக்கிறக்கி, அப்போது இருந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் இன்று மாணவர்கள் தொடர்பில் கதைக்கிறார்.

அதேபோன்று அன்று இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, இராணுவ மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் இன்று இராணுவத்தினருக்கும் புகையிரத சாரதி பயிற்சி வழங்குவதாகவும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேட்கிறார்.

எனவே இந்த அரசாங்கம் தங்களுக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆணையை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியும் என நினைக்கக்கூடாது. மக்கள் ஆணை என்பது கல்லில் எழுதப்பட்ட ஒன்று அல்ல. அது மாற்றமடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு போன்று 2019இல் சிலர் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு துடித்துக்கொண்டிருந்தார்கள்.

இறுதியில் அவர்களுக்கு 2வருடங்களில் அதிகாரத்தை இழக்க நேரிட்டது. அதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போதுள்ள ஆளும் கட்சி பிரதம கொரடாபோன்ற ஒருவர் அன்றும் இருந்தார். ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிரைக்கு மேல் நின்றே கதைத்துவந்தார்.

அதனால் இந்த அரசாங்கத்துக்கும் மக்கள் ஆணை ஒன்று கிடைத்திருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனை துஷ்பிரயோகம் செய்து எதிர்க்கட்சியை அடக்க முயற்சிக்க முற்படக்கூடாது என்றார்.

You may also like

Leave a Reply