பார்வதி அம்மாளின் மறைவு குறித்து கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் மல்கக் கவிதை!

by Amizhthu

இருக்கிறானா ? இல்லையா ?’ 

புலிப் போத்தை ஈன்று புறந்தந்து-

பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;

அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி

வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

                ★★★★★

மாமனிதனின்
மாதாவே ! – நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை ;
மடி சுமந்தது நாலு பிள்ளை !
நாலில் ஒன்று – உன்
சூலில் நின்று – அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது ; உன் –
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக்  காட்டுவேன் என்று…

சூளுரைத்து – சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது ;
நீல இரவில் – அது
நிலாச் சோறு தின்னாமல் –
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் –
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

                ★★★★★

அம்மா !
அதற்கு நீயும்  –
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட  –
நாட்பட – உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது !

                ★★★★★

‘தம்பி !
தம்பி !’ என
நானிலம் விளிக்க நின்றான் –  

அந்த
நம்பி;
யாழ்
வாழ் –
இனம்
இருந்தது – அந்த…
நம்பியை
நம்பி;
அம்மா !

அத்தகு –
நம்பி குடியிருந்த கோயிலல்லவா –
உன்
கும்பி !

                ★★★★★

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை…
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை  –
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்டவெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;

தரும நெறிகளைத்
தப்பாக்கி –
வைத்த காடையரை
வீழ்த்த…
தாயே உன்
தனயன்  தானே –
தந்தான்
துப்பாக்கி !

                ★★★★★

‘இருக்கிறானா ?
இல்லையா ?’
எனும்  அய்யத்தை
எழுப்புவது இருவர் ;
ஒன்று –
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு –
அரும்பொருள் ஆன
பிரபாகரன் !

                ★★★★★

அம்மா ! இந்த
அவல நிலையில் – நீ…
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் –
பாயைப் பிரியாத
நோயானாய் !
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி –
வந்தாய் சென்னை; அது –
வரவேற்கவில்லை உன்னை !
வந்த
வழிபார்த்தே –   

விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது !

                 ★★★★★

இனி
அழுது என்ன ? தொழுது என்ன ?
கண்ணீர்க் கலப்பைகள் – எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன ?
பார்வதித்தாயே ! – இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே !
நீ –
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம்தராத – எங்கள்
தமிழ்மண் –
நிரந்தரமாய்த்
தேடிக்கொண்டது  பழி ! 

                           – கவிஞர் வாலி

You may also like

Leave a Reply