இலங்கை காவல்துறையிடம் 556 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் ஒப்படைப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் 556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை (18-02-2026) பாதுகாப்பு அமைச்சி வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் குறித்த உபகரணத் தொகுதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய 365 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 1718 கணினிகள், 129 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 575 அச்சு இயந்திரங்கள், 45 மில்லியன் ரூபா பெறுமதியுடைய வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 17 மில்லியன் ரூபா பெறுமதியான 1750 யு.பி.எஸ் என்பன பொலிஸ் தலைமையகத்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. சட்டம் மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொலிஸாரின் புலனாய்வு மற்றும் களப்பணிகளை இலகுபடுத்துவதற்கும், நவீன தொழிநுட்ப வசதிகளைக் கிராம மட்டத்திலான பொலிஸ் நிலையங்களுக்கும் கொண்டு செல்ல இந்த நடவடிக்கை பாரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்பட்ட அதிகூடிய பெறுமதியைக் கொண்ட உபகரணத் தொகுதி இதுவென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அமைச்சின் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித அமரதுங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

“புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வு 2026

இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!