அரசியல் கைதிகள் விவகாரம்: நீதிபதி துரைராஜா தலைமையிலான குழு விசாரிக்கும்!

அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (19-02-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘அரசியல் கைதிகள் என்ற பதத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரால் வௌ;வேறு வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதற்கு அப்பால், எமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் பலர் உள்ளனர். அவர்களது தண்டனைக்காலத்தை நினைத்தவாறு குறைக்கமுடியாது’ என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலமாகத் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளின் தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுதலை செய்தல் என்பன தொடர்பில் எவ்வித இன, மத அடிப்படையிலான பாகுபாடுமின்றி நடுநிலையாக ஆராய்ந்து வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்புடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

உலகளாவிய நெருக்கடி: விளிம்பில் உலகம்

தமிழக அரசியலில் மாற்றத்தை விதைக்கும் தமிழ் தேசியம்: ஒரு வரலாற்றுப் பார்வை

கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி – நெதர்லாந்து