அக்குரேகொட இரட்டை படுகொலையின் பிரதான துப்பாக்கிதாரியாக ரூபல் சுரேஷ் என்பவர் செயற்பட்டுள்ளார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள ‘டுடு’ என்று அழைக்கப்படும் தரிந்து மதுசங்கவின் திட்டமிடல் மற்றும் வழிநடத்தலுக்கு அமைவாக சட்டத்தரணியும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20-02-2026) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு 57 கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 63 ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரயான காலப்பகுதியில் 08 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
2025 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுடனான குற்றச்சாட்டில் 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அதேபோல் பாதாளக்குழுக்களிடமிருந்து பெருந்தொகையான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய படுகொலைகள் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2006.11.10 ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதின் படுகொலை தொடர்பிலும், ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
2026.02.13 ஆம் திகதியன்று அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 12 விசாரணைக்குழுக்கள் ஊடாக விசாரணைகள் பல கோணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிதாரிகளுக்கு துப்பாக்கிகளை விநியோகித்த இருவரும், அவர்களுக்கு மோட்டார் வாகனத்தை வழங்கியவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துப்பாக்கிதாரிகளுக்கு தங்குமிடம் வழங்கியவரும் அவர்களுக்கு மோட்டார் வாகனம் வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த படுகொலையில் பிரதான துப்பாக்கிதாரியாக ருக்காவெல பகுதியை சேர்ந்த ரூபல் சுரேஷ் என்பவர் செயற்பட்டுள்ளார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள ‘டுடு’ என்று அழைக்கப்படும் தரிந்து மதுசங்கவின் திட்டமிடல் மற்றும் வழிநடத்தலுக்கு அ மைவாக சட்டத்தரணியும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளார்கள். இவ்வாறானவர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.