கனடாவிடமிருந்து யுரேனியம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

புது தில்லி - இந்தியா

இந்தியா – கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க வகையில், அரிய வகை கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பாக நம் நாட்டின் ஆக்கப்பூர்வ அணுசக்தி தேவைக்காக, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை, 2035ம் ஆண்டு வரை வழங்க கனடா முன்வந்துள்ளது. இதன் மூலம், நம் நாட்டின் அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது என கூறப்படுகிறது.

வட அமெரிக்க நாடான கனடா பிரதமர் மார்க் கார்னி, நான்கு நாள் அரசுமுறை பயணமாக கடந்த 27ம் தேதி நம் நாட்டிற்கு வந்தார். மும்பையில் தரையிறங்கிய அவர், தொழிலதிபர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். பிரதமர் மோடியை டில்லியில் நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக அணுமின் உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம், நம் நாட்டுக்கு கனடா யுரேனியத்தை வழங்கும். இது தவிர, அரியவகை கனிமங்கள் உள்ளிட்ட துறையில் ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா – கனடா இடையே, 2030ம் ஆண்டுக்குள் இரு நாட்டு வர்த்தகத்தை, 4.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு. பொருளாதாரத்தில் முழு கூட்டுறவுக்கு முன்னு ரிமை தர உள்ளோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யஉள்ளோம். இது முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கூட்டுறவு ஏற்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வ அணுசக்தி துறையில் கனடாவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நம் நாட்டிற்கு நீண்ட காலத்திற்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஒப்பந்தம் தான் அது.

சிறிய ரக அணு உலைகள் மற்றும் மேம்பட்ட நவீன அணு உலைகள் அமைப்பது குறித்தும், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றப் போகின்றன. சர்வதேச நாடுகளுக்கும் உதவும் வகையில் புத்தாக்க துறையில் இரு நாட்டுக்கும் இடையே வலுவான உறவு ஏற்பட்டு உ ள்ளது. கடந்த மாதம், நம் நாட்டில் நடந்த ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டின் வெற்றிக்கு மதிப்புமிக்க வகையில் பங்களித்த கனடா பிரதமர் கார்னிக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.ஐ., துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையே விரிவான கூட்டுறவை ஏற்படுத்த முடிவு செய்து உள்ளோம். குறிப்பாக குவான்டம் கம்ப்யூட்டிங், சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் செமிகண்டக்டர்கள் உற்பத்தி துறையில் இணைந்து பணியாற்றஉள்ளோம். அரியவகை கனிமங்கள் துறையில் கனடாவுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் நம் வினியோக தொடருக்கு பெரும் வலிமை தரும்.

விண்வெளித் துறையில் இரு நாடுகளை சேர்ந்த இளம் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோரை இணைக்கப் போகிறோம். இதன் மூலம் இத்துறை யில் புரட்சி ஏற்படும். வெறும் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, எதிர் கால தேவைக்காக சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் துறையில் பலமான கூட்டணியை உருவாக்கிஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* நம் நாட்டிற்கு நீண்ட காலம் யுரேனியம் வினியோகம்.
* அதன்படி, 2027 – 35 வரை, 24,000 கோடி ரூபாய் மதிப்பில், 11,000 டன்கள் யுரேனியத்தை கனடா வழங்கும்.
* துாய்மையான எரிசக்தி தொழில்நுட்பத் துறையில் தங்கு தடையற்ற உற்பத்திக்காக அரியவகை கனிமங்களை கனடா வினியோகிக்கும்
* மின் வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறையில் கூட்டுறவு
* எல்.என்.ஜி., எனப்படும் திரவ இயற்கை எரிவாயு, சூரிய சக்தி, ஹைட்ரஜன் மற்றும் எரிசக்தி சேமிப்பு துறையில் கூட்டுறவை விரிவுபடுத்த முடிவு
* எரிசக்தியை தவிர, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, குவான்டம் கம்ப்யூட்டிங், சூப்பர் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் என வளர்ந்து வரும் துறையில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படும்
* ஏ.ஐ., அபிவிருத்திக்காக ஆஸ்திரேலியா – கனடா – இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பங்களிப்பில் கையெழுத்து.

கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: கடந்த ஓராண்டாக கனடா – இந்தியா உறவை புதுப்பிக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் பேச்சுகள், சந்திப்புகள் நடந்தன. இரு நாட்டின் வெளியுறவு அமைச்சர்களும் ஐந்து முறை சந்தித்து பேசினர்.
அது வெறுமனே உறவை புதுப்பிக்கும் முயற்சி அல்ல. இரு நம்பகமான நாடுகளுக்கு இடையே வலுவான நட்புறவை அமைப்பதற்கான நடவடிக்கை. இதனால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நட்புறவு ஆழமாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

விஜயின் குரூர துணிச்சல் ! | முதல்வர் பதவின் மீதான வெறி !

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்வலம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.