3 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

3 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ ஆகிய போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரண்டு இந்தியப் பிரஜைகள் புதன்கிழமை (04-03-2026) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இன்று அதிகாலை 01.59 மணியளவில் ‘எயார் ஏசியா’ நிறுவனத்திற்குச் சொந்தமான FD-142 என்ற விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவர்களைச் சோதனையிட்ட போதே இந்தப் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் கொண்டு வந்த கைப்பைக்குள் நான்கு பொதிகளாக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 03 கிலோ 038 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள், 182 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 37 வயதுடைய இந்தியப் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.