சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை:

“சங்ககிரி பகுதியில் பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும் என்ற அப்பகுதி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை, திமுக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

சங்ககிரியில் 20,000-க்கும் மேற்பட்ட பாரவுந்துகள் வாடகைக்கு இயங்கி வருகின்றன. பாரவுந்துகள் நிறைந்த பகுதி என்பதால், சங்ககிரியில் இயங்கி வரும் 1000-க்கும் மேற்பட்ட பாரவுந்து பழுதுபார்க்கும் பணிமனைகளை நம்பி, ஏறத்தாழ 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. சங்ககிரி முழுவதும் சிதறிக் கிடக்கும் பாரவுந்து பழுதுபார்க்கும் பணிமனைகளில் பெரும்பாலானவை தனியாருக்குச் சொந்தமான வாடகை இடங்களில் இயங்கி வருவதால், வருமானத்தில் பாதியை வாடகைக்கே செலவிடப்படும் நெருக்கடியான சூழல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த நிதிச்சுமைக்கு ஆளாகின்றனர்.

சங்ககிரியில் மாதந்தோறும் 2 கோடி ரூபாய் அளவிற்குப் பணிமனைக்கான வாடகைக்கே செலவிடப்படும் நிலையிலும்; பணிமனைகளில் சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லாமல் தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவது மிகுந்த கவலையளிக்கின்றது.

தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன், நியாயமான வாடகையில் ஒரே இடத்தில் ‘ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்புப் பணி மையம்’ அமைத்துத் தர வலியுறுத்தி, பாரவுந்து பழுது பார்க்கும் தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன், அமைச்சர்கள் முதல் ஆட்சியர் வரை அதிகார மையங்களிடம் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். இருப்பினும், அதிகார மமதையுடன் திமுக அரசு இன்றுவரை அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பது, உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும் கொடும்போக்காகும். இதற்குப் பெயர்தான் ‘விடியல் தரும் திராவிட மாடல்’ அரசா?

ஆகவே, சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசு உடனடியாக ‘ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்புப் பணி மையம்’ அமைத்துத் தருவதுடன், கொங்கணாபுரத்தில் பாரவுந்து வாகன பழுது பார்க்கும் சங்கத்தின் இலச்சினை பொருந்திய நினைவுக்கோபுரமும் அமைத்துத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

Related posts

84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026 சுவிஸ்

ஹோர்முஸ் நெருக்கடி