தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இரு மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து விட்டார்; காரைக்குடியில் அவர் போட்டியிடுகிறார்.
புதுச்சேரியில் ஏப்., 9ல் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2021 தேர்தலில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 28ல் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. ஆந்திரா பகுதியில் உள்ள ஏனாம், கேரளா பகுதியில் உள்ள மாஹி தொகுதிகளை தவிர, மற்ற 28 தொகுதிகளிலும் அக்கட்சி களமிறங்கியது.
அந்த தேர்தலில், 3.37 சதவீத ஓட்டுகளுடன் நான்காவது இடம் பிடித்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 4.90 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. இந்நிலையில், புதுச்சேரியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 20, 21ம் தேதிகளில் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை தேர்தலில், அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில், வரும் 30ல் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் ஏப்., 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே, தமிழக தேர்தலுக்காக, கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை சீமான் துவக்குகிறார்.
‘ஓட்டு விற்பனைக்கா ? விவசாயிக்கா ?’
‘உங்கள் ஓட்டு விற்பனைக்கா?, விவசாயிக்கா? என்ற முழக்கத்துடன், நா.த.க., வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
தேர்தல் கமிஷனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, போஸ்டர், பேனர் வாயிலாக பிரசாரத்தை அக்கட்சி வேட்பாளர்கள் துவக்கிய நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, ‘உங்கள் ஓட்டு விற்பனைக்கா, விவசாயிக்கா’ என்ற முழக்கத்தை முன்வைத்து, நா.த.க., வேட்பாளர்கள் நேற்று பிரசாரத்தை துவக்கினர்.