‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்திலிருந்து, அமிர்தாஞ்சன் நிறுவனம் உடனே வெளியேற வேண்டும்’ என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உறுதி செய்தது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 14 கிரவுண்ட், 910 சதுர அடி நிலம், லஸ் சர்ச் சாலையில் உள்ளது. இந்த நிலம், பி.ஆர்.சுந்தர அய்யர் என்பவருக்கு, 1901ம் ஆண்டு, ஆக., 28ல், 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டது.
அப்போது, மாதம் ஒன்றுக்கு 1,400 ரூபாய் குத்தகை தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த குத்தகை உரிமைகளை, ராமாயி அம்மாள் என்பவருக்கு, சுந்தர அய்யர் மாற்றி உள்ளார். பின் அவரிடம் இருந்து, வலி நிவாரணி தைலம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமிர்தாஞ்சன் நிறுவனம், குத்தகை உரிமைகளை பெற்று, பல ஆண்டுகளாக, 1,400 ரூபாய் மாத வாடகை செலுத்தி வந்தது.
இந்த குத்தகை காலம், 2000 ஆண்டு ஆக., 27ல் நிறைவடைந்தது. இதையடுத்து, இடத்தை காலி செய்யுமாறு, அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்கு, 2001 மற்றும் 2004ம் ஆண்டுகளில், ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. அந்த இடத்தை நிறுவனம் காலி செய்யவில்லை. இதையடுத்து, கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிப்பதற்காக, அறநிலையத்துறை சட்டப்படி, 2005ல் அமைக்கப்பட்ட குழு, இந்த நிலம் குறித்து ஆய்வு செய்தது.
சென்னை நகரின் மையப்பகுதி இடம் என்பதால், மாத வாடகையை, 3.30 லட்சம் ரூபாய் என, நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமிர்தாஞ்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தனி நீதிபதி, நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, 2001 நவ.,1 முதல் வாடகை நிலுவைத் தொகையை செலுத்தும்படி, கடந்த ஆண்டு செப்., 25ல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, அமிர்தாஞ்சன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”மனுதாரர் நிறுவனம் நேரடி குத்தகைதாரர் அல்ல. கடந்த 1901ல் சுந்தர அய்யர் என்பவருக்கு தான் குத்தகை தரப்பட்டது. அவர், ராமாயி அம்மாளுக்கு குத்தகை உரிமையை மாற்றி உள்ளார். அவரிடம் இருந்து தான் உரிமையை, அமிர்தாஞ்சன் நிறுவனம் பெற்றுள்ளது.
”குத்தகை காலம் முடிந்தும், நிலத்தை காலி செய்யவில்லை. உயர்த்தப்பட்ட வாடகை தொகையையும் இதுவரை செலுத்தவில்லை. வாடகை நிலுவைத் தொகை மட்டும், 9.74 கோடி ரூபாய் உள்ளது,” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கின் மேல்முறையீட்டாளர் அசல் குத்தகைதாரர் அல்ல. அசல் குத்தகைதாரர் தன் குத்தகை உரிமைகளை, மேல்முறையீட்டாளருக்கு ஒப்படைத்துள்ளார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி, குத்தகை வாடகை தொகையை நிர்ணயிக்கும் குழுவின் நடவடிக்கையில், மேல்முறையீடுதாரரான நிறுவனமும் பங்கேற்ற நிலையில், தற்போது மேல்முறையீடு செய்ததை ஏற்க முடியாது.
பூஜைகள் உள்ளிட்ட சடங்குகளை நிறைவேற்ற, இதுபோன்ற குத்தகை வாடகை வருமானத்தை நம்பியே கோவில்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டே, நிலத்தில் இருந்து உடனே வெளியேறும்படி, மேல்முறையீடுதாரருக்கு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது