கடைசி ஓவரில் குஜராத் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது; பஞ்சாப் மீண்டும் ஏமாற்றமளித்தது.

 சாய் சுதர்சன் அரைசதம் விளாச, கடைசி ஓவரில் அசத்திய குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி மீண்டும் ஏமாற்றியது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று, ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் குஜராத், பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு முகமது சிராஜ் தொல்லை தந்தார். சிராஜ் வீசிய முதல் ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா (2), கூப்பர் கொனாலி (0) வரிசையாக அவுட்டாகினர். பிரப்சிம்ரன் சிங் (15) நிலைக்கவில்லை. ஜேசன் ஹோல்டர் பந்தில் நேஹல் வதேரா (0), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (19) ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி 8.4 ஓவரில் 47/5 ரன் எடுத்து தடுமாறியது.

பின் இணைந்த சூர்யான்ஷ் ஷெட்ஜ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. ஹோல்டர் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்டாய்னிஸ். மானவ் சுதார் வீசிய 14வது ஓவரில் வரிசையாக 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய சூர்யான்ஷ், 24 பந்தில் அரைசதம் எட்டினார். ஆறாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது ரபாடா பந்தில் சூர்யான்ஷ் (57 ரன், 5X6, 3X4) அவுட்டானார்.

ஹோல்டர் ‘வேகத்தில்’ ஸ்டாய்னிஸ் (40), சேவியர் பார்ட்லெட் (0) வெளியேறினர். ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த யான்சென் (20) ஆறுதல் தந்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. வைஷாக் (1) அவுட்டாகாமல் இருந்தார். குஜராத் அணி சார்பில் ஹோல்டர் 4, சிராஜ், ரபாடா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (5) சோபிக்கவில்லை. பின் இணைந்த சாய் சுதர்சன், பட்லர் ஜோடி கை கொடுத்தது. யான்சென், பார்ட்லெட் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார் பட்லர். இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது வைஷாக் பந்தில் பட்லர் (25) அவுட்டானார். நிஷாந்த் சிந்து (15) நிலைக்கவில்லை.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், ஸ்டாய்னிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். சகால் வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சுதர்சன், 37 பந்தில் அரைசதம் கடந்தார். வைஷாக் பந்தில் சுதர்சன் (57) அவுட்டானார். ராகுல் டிவாட்டியா (2), ஜேசன் ஹோல்டர் (5) ஏமாற்றினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் பந்துவீசினார். முதல் 4 பந்தில், 8 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய வாஷிங்டன் வெற்றியை உறுதி செய்தார்.

குஜராத் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வாஷிங்டன் (40), அர்ஷத் கான் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Related posts

சொந்த மண்ணில் லக்னோ அணி அதிர்ச்சி தோல்வி

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்!

“அறிவியலுடன் ஒன்றிணைந்து சுகாதாரத்திற்காகப் போராடுவோம்” – புது தில்லியில் இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆற்றிய உரை