டச்சுப் போர் தியாகிகளுக்காக இலங்கை மண்ணில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொழும்பில் உள்ள ஜாவத்தை மயானத்தில் அமைந்துள்ள பொதுநலவாய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகில், இலங்கை மண்ணில் அடக்கம் செய்யப்பட்டுள்ள டச்சுப் போர் தியாகிகளைக் கௌரவிக்கும் வகையில், இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இன்று (04-05-2026) நினைவு தினத்தை அனுஷ்டித்தது.

நெதர்லாந்து பதில் தூதுவர் இவான் ரூட்ஜென்ஸ் அங்குள்ள போர் நினைவுச் சின்னத்துக்கும், போரில் உயிரிழந்த டச்சு நாட்டவர்களின் தனிப்பட்ட கல்லறைகளுக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மொத்தம் 36 டச்சு நாட்டவர்களின் உடல்கள் கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, நெதர்லாந்து ஒவ்வோர் ஆண்டும் மே 4ஆம் திகதி உயிரிழந்த தன் நாட்டு வீரர்களையும் குடிமக்களையும் நினைவுகூருகிறது.

1961ஆம் ஆண்டு முதல், இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட 102,000 டச்சு யூதர்கள் மற்றும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், அதற்குப் பிறகு நடந்த பல்வேறு மோதல்கள், போர்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகளில் உயிரிழந்த டச்சு வீரர்களும் நினைவுகூரப்படுகிறார்கள்.

மேலும், நெதர்லாந்தில் இன்று (4) இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள டேம் சதுக்கத்தில் (Dam Square) அந்நாட்டு மன்னர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் அஞ்சலிக்கான சடங்குகள் நடைபெறுகின்றன.

அதேவேளை நெதர்லாந்தின் அனைத்து நகரங்களிலும் உள்ளூர் மட்டத்திலான நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

Related posts

பம்பலப்பிட்டியாவில் விசா இல்லாமல் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர் கைது!

“நாம் ​நீலகாமம்” போராட்டத்திற்கு முழு ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் சில பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.