செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளினால், கைதுகளினால் ஆரம்பத்தில் போதைப்பொருள் வர்த்தகம் குறைவடைந்திருந்தபோதும் தற்போது அது மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் நடக்கின்றது. யுத்தத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் என்பது மிக மிக அரிது. எனெனில் விடுதலைப்புலிகளிடம் மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்குஇகிழக்கில் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை இராணுவத்தினரும் இராணுவத்தினரோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களும் பேரினவாத குழு அரசியலோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களுமே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் கலாசாரத்தை,பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக, தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதற்காக சீரழிக்க வேண்டும் என்பதற்காக போதைப்பொருள் வர்த்தகம் திட்டமிடப்பட்ட முறையில் வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போதைய ஆட்சி இதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.தற்போது கூட வடக்குஇகிழக்கில் மாணவர்களிடையில், அவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு இந்த போதைப் பொருள் வர்த்தகம் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் போதைப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
செம்மணி மனிதப்புதை குழியில் இது வரை 412 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழினப் படுகொலை நடந்ததற்கான முக்கிய சாட்சியாகவுள்ளது.செம்மணி மட்டுமல்ல வடக்குஇகிழக்கில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல மனிதப் புதைகுழிகள் உள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்குகின்றது.செம்மணி விடயத்தில் அரசாங்கத்தின் நிதி மட்டும் போதாது நீதியும் வேண்டும். இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே வேண்டும்.
இந்தப்படுகொலைகளுக்கு இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச என்பவர் சாட்சியாகவுள்ளார்.இந்தப்படுகொலையுடன் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் தொடர்புபட்டுள்ளதால் உள்ளூர் விசாரணை மூலம் உண்மைகள் வெளிவராது. எனவேதான் சர்வதே பொறிமுறையுடனான விசாரணை அவசியமாகவுள்ளது
இது ஒரு அப்பட்டமான தமிழினப்படுகொலை.இவ்வாறான தமிழினப்படுகொலைகள் வடக்கு, கிழக்கில் பல இடங்களில் நடந்துள்ளன. செம்மணி மனிதப்புதக்குழி தொடர்பான அகழ்வாராய்ச்சிஇ விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயன்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நீதி விசாரணை வேண்டுமென்றே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.