தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதையடுத்து, ஈழத் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Chengalpattu: Tamilaga Vettri Kazhagam (TVK) founder-chief Vijay meets supporters at the party's special general council meeting, at Mahabalipuram in Chengalpattu district of Tamil Nadu, Wednesday, Nov. 5, 2025. (PTI Photo) (PTI11_05_2025_000240B)

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள விஜய்க்கும், அவரது தமிழக வெற்றிக் கழகத்துக்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும் தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பதுடன், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பதிவுசெய்த விஜய்க்கு தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ‘தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவுசெய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

‘புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ளீர்கள். மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த ஆணையை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி, ‘ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாஷைகள் குறித்து உங்களது தெளிவான நிலைப்பாட்டினை நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம். தொப்புள்கொடி உறவுகளான எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும் உங்களது தலைமையிலான தமிழக அரசு முன்னின்று ஒத்துழைப்பு வழங்கும் என ஈழத்தமிழர்களாகிய நாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம்’ எனவும் சிறிதரன் அவரது வாழ்த்துச்செய்தியில் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ‘தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரையும், அன்னையரையும் முழுமையாக இணைத்து சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு முதலமைச்சராகும் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று வரலாற்று சாதனை படைத்து வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு உயரிய சபையான பாராளுமன்றத்தின் ஊடாக வாழ்த்துக் கூறுவதாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்க்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ‘தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ்மக்களுக்கு தமிழக மக்களினதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்கவேண்டும் என உரிமையோடு எதிர்பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

விஜயின் குரூர துணிச்சல் ! | முதல்வர் பதவின் மீதான வெறி !

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்வலம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.