முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கண்ணீர் சிந்தியதைப் போலவே, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தா குடும்பமும் கண்ணீர் சிந்துகிறது. – தர்மலிங்கம் சுரேஷ்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின்போது தமிழ் மக்கள் கண்ணீர் விட்டது போல் 17 வருடங்களுக்கு பின்னர் இன்று அதே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் கண்ணீர் விடுகிறது. அவ்வாறே தமிழ் மக்கள் மீது இன அழிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, ‘தமிழின அழிப்பு நாள்’ அனுஷ்டிப்பு நிகழ்வு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு முன்னால் செவ்வாய்க்கிழமை (12-05-2026) மாலை கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்றது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி, கஞ்சிப் பகிர்வை ஆரம்பித்துவைத்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடத்தப்பட்டது மே மாதத்திலாகும். இந்த மாதத்தில் மருத்துவம், உணவு இன்றி குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை பட்டினியை எதிர்நோக்கியதுடன் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இன அழிப்பு இடம்பெற்று 17 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த மாதம் கண்ணீர் சுமந்த மாதம். தமிழர்களுக்கு அநீதி விளைவித்தவர்களில் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவர். அதேபோன்று தமிழர்களின் இன அழிப்பில் பங்கு கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

தமிழர்களை, அவர் அதைச் செய்தார், இவர் இதைச் செய்தார் என குற்றஞ்சாட்டி தமிழ் மக்களுக்கு எதிராக மிக மோசமாக இவர்கள் செய்த அநியாயங்கள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழ் மக்களை கொல்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், விமானங்களை கொள்வனவு செய்வதற்காக பொய்யான கணக்குகள் காட்டப்பட்டு பெருந்தொகைப் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக இந்த ஊழல் மோசடிகளை பலர் சந்திக்கும் நிலைப்பாடு காணப்படுகிறது.

ஆகவே, தமிழர்களை மிக மோசமாக அழித்தவர்களை கைது செய்வதையிட்டு தமிழர்கள் நிம்மதி அடைகின்றனர். அதேவேளை இந்த இனத்துக்கு எதிராக அநியாயம் செய்தவர்களை கைது செய்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நாட்டின் தலைவர் முன்வர வேண்டும் என்றார்.

Related posts

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

விஜய நாராயண் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.