நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – 2026 சுவிஸ்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில் வீரகாவியம் படைத்து தங்களை தமிழீழ விடுதலைக்காக ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 16.05.2026 ஞாயிறு ஊரி மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவீரர் பொதுக்குறியீட்டுத் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடருடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. பெரும் தளபதிகளிற்கான ஈகைச்சுடர்களை மாவீரர்களின் குடும்ப உறவுகளும், உணர்வாளர்களும் ஏற்றிவைத்தனர். மண்டியிடா மாவீரர்களுக்கு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் மக்களால் செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் மாவீர வணக்கப் பாடல்களுடன், எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

நடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந்தளபதிகளையும், மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி வணக்கப் பாடல்கள், எழுச்சி நடனங்களுடன், சிறப்புரையும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் இளையோர், சிறுவர்களுடன் இணைந்து நம்பிக்கையுடன் பாடினர். தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் உறுதியெடுத்து நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.