தமிழ் இளையோர் அமைப்பு
Tamil Youth Organisation
Empowering youth to excel as leaders and architects of our nation
உரிமைக்காக எழுதமிழா 2026
22.06.2026
ஊடக அறிக்கை
2026 யூன் 22 அன்று, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பெல்சியம் தலைநகர் புறுசலில் (Bruxelles) அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் ஒன்றிணைந்து, “உரிமைக்காக எழு தமிழா” என்ற கோசத்தோடு மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்து, தமிழின அழிப்பிற்கு நீதி மற்றும் சுதந்திர தமிழீழத்திற்கான ஒருமித்த குரலை எழுப்பியிருந்தனர்.
இப்போராட்டமானது, புறுசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப்பகுதியை மையப்படுத்தி ஆரம்பித்த பேரணியானது பறை முழக்கங்கள், கொட்டொலிகளோடு பேரெழுச்சியுடன் பாதைகள், தமிழின அழிப்பின் காட்சிப்படங்கள் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு நடைபெற்றது. தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புகள், தொடரும் திட்டமிட்ட தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டும் பதாகைகளைத் தாங்கி, கொட்டொலிகளால் நகரம் அதிர நடைபெற்ற இப்போராட்டத்தினைப் பார்த்த வேற்றின மக்களும் ஊடகங்களும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர். இப்பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்றமையினால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் புறுசலில் அமைந்துள்ள சர்வதேச நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேரணியின் நிறைவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் பொதுச்சுடர் ஏற்றலை தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம். மலர்வணக்கம் மற்றும் இடம்பெற்றன. பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த பேச்சாளர்கள், சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடாத்திய தமிழின அழிப்புப்போரின் பேரவலத்தோடு, போராட்டம் மௌனித்து பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னரும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறைகள் மற்றும் சவால்கள் பற்றியும் தொடரும் திட்டமிட்ட இனஅழிப்பை கண்டித்தும் இன்றுவரை நீதிக்கான கதவுகள் திறக்கப்படாமல் இருப்பதை பற்றியும் தமிழ் மற்றும் வேற்றின மொழிகளிலும் உரையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்வுகள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட கருத்துக்களானது, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்பட்டு, தமிழர்கள் தன்னாட்சி உரிமையுடன் வாழும்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த கருத்துருவாக்கத்தோடு, உலகத்தமிழினமும் இளையதலைமுறையினரும் ஒன்றிணைந்து, தமிழர் பிரச்சினையை சர்வதேச அரங்குகளில் தொடர்ந்து முன்வைப்பது இன்றியமையாததாகும். சிறப்பாக, தலைமுறையின் தார்மீகப் பொறுப்பு என்பதை உணர்வோடு பதிவுசெய்கிறோம்.
இப்போராட்டத்தில், பல்வேறு நாடுகளின் இளையோர் பிரதிநிதிகள், தமிழீழத்தின் வரலாறு, உரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மறக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தனர்
இந்நிகழ்வில் ஈழத்தமிழர்களின் மனவலிமை மற்றும் தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உறுதியை பிரதிபலிக்கும் பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் நீதி, தன்னாட்சி மற்றும் நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தும் அறிவிப்பு வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.
நிகழ்வின் இறுதியில், தேசிய கொடி கையேந்தலை தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் ஒலிக்கப்பட்டது. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ” என்ற தாரக மந்திரத்துடன் போராட்டம் நிறைவடைந்தது. “உரிமைக்காக எழு தமிழா 2026″ நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பின்(TYO) ஏற்பாட்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் (TCC), அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பு தமிழீழம் (IDCET) மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET) ஆகியவற்றை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தொடர்பகத்தினால் ஒருங்கிணைத்து செய்யப்பட்டது.
புறுசலில் (Bruxelles) காணப்பட்ட வலுவான பங்கேற்பு, நீதி, சுதந்திரம் மற்றும் தன்னாட்சிக்கான தமிழ் மக்களின் கோரிக்கை தலைமுறைகளைத் தாண்டியும், எல்லைகளைத் தாண்டியும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழ் இளையோர் அமைப்பு (Tamil Youth Organisation)
www.tyointernational.com
international@tamilyouth organisation.com