₹100 கோடி கடனைத் திருப்பிச் செலுத்துமாறு நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று பிரிட்டன் தப்பிய வைர வியாபாரி நிரவ் மோடி, ‘பேங்க் ஆப் இந்தியா’ தொடர்பான கடன் வழக்கில், 100 கோடி ரூபாய் செலுத்தும்படி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மும்பையை தலைமையிடமாக கொண்டு சர்வதேச அளவில் வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். தொழில் வளர்ச்சிக்காக என, ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’யில் பல்வேறு காலக்கட்டங் களில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்ற இவர், அதை திரும்ப செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தப்பினார்.

அதன் பின், ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியுடன் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு, தற்போது பிரிட்டன் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இங்கு வந்ததும் அவர் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்.

இந்நிலையில், நிரவ் மோடியின், ‘பயர்ஸ்டார்’ குழுமத்தைச் சேர்ந்த, ‘பயர்ஸ்டார் டைமண்ட் எப்.ஸீ.இ.,’ என்ற நிறுவனம் துபாயில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்துக்கு 2012ல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் பல கோடி ரூபாய் கடன் வழங்கியது.

அந்த கடனுக்கு நிரவ் மோடி தனிநபர் உத்தரவாதம் அளித்திருந்தார். இந்நிலையில், அந்நிறுவனம் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால், நிரவ் மோடியிடம் 40 கோடி ரூபாய் நிலுவை தொகையை வசூலிக்க வங்கி முயன்றது. அது முடியவில்லை.

தற்போது அது வட்டியுடன் 100 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. அதை வசூலிக்க லண்டன் நீதிமன்றத்தில் வங்கி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், நிலுவை மற்றும் வட்டி தொகையான 100 கோடி ரூபாயை பேங்க் ஆப் இந்தியாவுக்கு செலுத்தும்படி நிரவ் மோடிக்கு உத்தரவிட்டது.

Related posts

பூமிக்குள் புதைந்த வரலாறு: ஐபீரிய குகைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான மனித DNA கண்டுபிடிப்பு

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து; கச்சா எண்ணெய் விலையில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்குக் சரிவு.

உலக ஒழுங்கின் மறுசீரமைப்பா? புதினின் எச்சரிக்கைகள், உக்ரைன் போர், ஸ்டார்மரின் ராஜினாமா மற்றும் ஐரோப்பாவின் அரசியல் நிலநடுக்கம்