இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.
30-11-2025 | இலங்கை –
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29.11.2025) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக, முக்கியமாக வரி விலக்குடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு பொறிமுறையின் கீழ் செயற்பட்டு, இந்தப் பொருட்களை விடுவிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, இந்நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் பலதரப்பு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படும் உதவிகள் என்று நான்கு முக்கிய வகைகளாகப் பிரித்து இனங்காணப்பட்டன.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் நாட்டிற்கு அவசரமாகத் தேவைப்படும் பொருட்களின் பட்டியலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெறுநராக பெயரிடப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்போது, அந்தப் பொருட்களுக்கான சுங்க வரிகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு அளிப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் மூலம் பொருள் உதவிகளை செயற்திறனாகவும், முறையான வகையிலும் விடுவிக்க முடியும்.
பொருள் உதவிகளைப் பெறுபவராக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெயரிடப்படவில்லை என்றால், சாதாரண நடைமுறையின் கீழ் வரி செலுத்தி விடுவிக்க வேண்டும்.
அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் திறம்பட அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன் ஏற்பாடுகளுடன், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட மேற்கொள்ளவுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே மற்றும் ரஸ்ஸல் அபோன்சு மற்றும் இலங்கை சுங்கம் உட்பட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பற்கேற்றனர்.