195 பாகிஸ்தானிய குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக நம் நாட்டிற்குள் வந்த 195 பேருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழை குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி வழங்கினார்.

ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தானில் இருந்து வந்த புலம்பெயர்ந்தோர் 195 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குடியுரிமை பெற்றவர்கள், ஹிந்து, சீக்கிய, பவுத்த மற்றும் சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நிகழ்ச்சியில் பேசிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி, ‘புன்னகையோடு வாழுங்கள். இனி நீங்கள் இந்திய குடிமக்கள். இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள், முந்தைய அரசுகளின் (காங்கிரஸ்) புறக்கணிப்பால், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்தனர். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, 1947 மற்றும் 1956க்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்து, அகதிகளாக வாழ்ந்து வந்தவர்களின் நீண்ட கால கனவான இந்திய குடியுரிமையை பெற வழிவகை செய்தது,’ எனக் கூறினார்.

குடியுரிமை பெற்ற 195 பேரில் 122 பேர் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றனர். மீதமுள்ள 73 பேர் ஆமதாபாத் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்ததன் அடிப்படையில் குடியுரிமை சான்றிதழ்களைப் பெற்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் – கடந்த 2019ம் ஆண்டு பார்லியில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், 2024ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. 2014, டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.