புதியதோர் உலகம் செய்வோம் – கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! – செந்தமிழன் சீமான்

by
0 comments

என் பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் இறைவனை எண்ணி உணவும் நீரும் துறந்து நோன்பு நோற்கும், புனிதமான ரமலான் மாதத்தில், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மிகுந்த கவலையையும், போர் பதற்றத்தையும் அளிக்கிறது.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளைத் தீரத்துடன் எதிர்த்து நிற்கும் ஈரான் பெருந்தேசத்திற்கும் இடையே மூண்டுள்ள கடும் போரில், இருபுறமும் உள்ள பல நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் செய்திகள் பெருந்துயரத்தை தருகிறது.

அதுமட்டுமின்றி, இப்போருக்கு நேரடி தொடர்பில்லாத ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நடைபெறும் ஏவுகணை தாக்குதல்களும், அங்குப் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிந்து வரும் என்னரும் தமிழ்ச்சொந்தங்கள் உட்படப் பல இலட்சக்கணக்கான மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ள செய்திகளும் இதயத்தைக் கனக்கச்செய்கிறது.

என் நினைவுகள் முழுவதும் வறுமை காரணமாக வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் சென்று, தற்போது பெரும் பதற்றத்தில் உள்ள என்னரும் தம்பி தங்கைகள் மற்றும் அவர்களின் நிலையை எண்ணி தமிழ்நாட்டில் தவித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர் பற்றியே உள்ளது. என் உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது துணிவுடனும், மன உறுதியுடனும் இருங்கள். ஈழத்தாயகத்தில் போர்ச்சூழலை நேரில் கண்டு, கடந்து வந்தவன் என்பதால், உங்களின் மனநிலையை என்னால் முழுமையாக உணர முடிகிறது.

banner

இதைவிடக் கடுமையான போரினை எதிர்கொண்ட இனத்தின் பிள்ளைகள் நாம். நம்பிக்கையுடன் கவலை இன்றி இருங்கள். விரைவில் இப்போர் முடிவுக்கு வந்து, இயல்பு நிலை திரும்பும். தாங்கள் வசித்து வரும் நாடுகள் மற்றும் அந்தந்த நாடுகளில் இருக்கும் நம் நாட்டு தூதரகங்கள் தரும் அறிவுறுத்தல்கள் படி பாதுகாப்பாக இருங்கள்.

தமிழ்நாட்டில் அச்சத்தில் ஆழ்ந்துள்ள உங்கள் பெற்றோருக்கும், மனைவி, குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், ஆறுதலும் பெரும் நம்பிக்கையும் தாருங்கள். நீங்கள் தரும் துணிவே வெகுதொலைவில் கவலை தோய்ந்து தவித்து நிற்கும் அவர்களை மனதளவில் வலிமைப்படுத்தும்.

இந்திய பெருநாடு இருபுறமும் உள்ள ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்க நாடுகளிடம் பேசி போரினை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர, உடனடியாக அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். ஐநா அவையும் ஐரோப்பிய நாடுகளும் ஏற்படும் பேரழிவைத் தடுக்க, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முனைய வேண்டும்.

விரைவில் இக்கொடியப் போர் முடிவுறட்டும்!
ஆதிக்கமும், ஆக்கிரமிப்பும், அடிமை நிலையும் அடியோடு ஒழியட்டும்!

புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் கேட்போம்
புனிதமோடு அதையெங்கள் உயிரென்று காப்போம்!
-புரட்சிப்பாவலர் தாத்தா பாரதிதாசன்

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00