வங்கதேசத்தில் கடந்தாண்டு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இதன் நீட்சியாக அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன. ஹிந்துக்கள் கொல்லப்பட்டதோடு அவர்களின் சொத்துகளும் சூறையாடப்பட்டன.
தற்போது அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்ட நிலையில் அண்மைக்காலமாக ஹிந்து நபர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடக்கவில்லை. இந் நிலையில், ஹிந்து நபர் ஒருவரின் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் பெயர் நயன் சாது(40). சட்டோகிராம் மாவட்டத்தில் தோஹசாரி என்ற பகுதியைச் சேர்ந்தவர். குருஷ்குல் ஒன்றியத்தில் காளி கோவில் பராமரிப்பாளராகவும், பூசாரியாகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இவர் தமது வீட்டில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வலுத்துள்ளதாக சிறுபான்மைக்குழு தெரிவித்துள்ளது.
ஏப்.19ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், நயன்சாதுவை அழைத்துச் சென்றதாக உள்ளூர் மக்கள் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.