உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை அசாதாரணமான முறையில் அதிகரித்து அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அரசாங்கம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 65 முதல் 75 டொலர் வரையிலான குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்துள்ள நிலையில், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் அதிக விலைக்கு விற்பனை செய்வது ஒரு ஏமாற்று வேலை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (03-05-2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மே தினத்திற்குப் பின் தந்திரமான விலை உயர்வு, மற்றும் வழமையாக ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதியே எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், மே தினக் கூட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டமிட்டு மே மாதம் 2 ஆம் திகதியே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அரசாங்கம் மிகச் தந்திரமாக மக்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளதைக் காட்டுகிறது. டீசல் மற்றும் பெட்ரோல் விலை அதிகரிப்பு காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்து, அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மே தினக் கூட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அவற்றின் திகதிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே ஜனாதிபதி கருத்துத் தெரிவிப்பது நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் ஒரு மறைமுக அழுத்தமாகும். இது சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சிக்கு முரணான செயல் என்றும், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது பழைய ஆட்சியாளர்களின் அதே முறையற்ற பாதையிலேயே பயணிக்கின்றனர். மே தினத்தில் கூடிய மக்கள் கூட்டத்தை வைத்து அரசாங்கம் மார்தட்டிக்கொண்டாலும், அவர்களின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமாகவும், சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதைப் பொதுமக்கள் கவனித்து வருகின்றனர்.
மேலும், மே தினக் கூட்டங்களில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைகள் உண்மையல்ல. மே தினக் கூட்டங்களில் ஊடகங்களுக்குக் எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அத்துடன் சில ஊடகங்களுக்கு மாத்திரம் முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை ஒவ்வொரு கட்சிகளினதும் ஊடகப் பிரிவினர் இது குறித்து ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டது என்றார்.