பஞ்சாப் ராணுவ முகாமில் தொடர் குண்டுவெடிப்புகள்!

பஞ்சாபில், எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் உட்பட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சதிச்செயலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருக்க வாய்ப்புள்ளதாக, பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் ஜலந்தரில் எல்லை பாதுகாப்பு படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இங்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக வாங்கும் பொருட்களை வினியோகம் செய்யும் ஒருவர், தன் ‘ஆக்டிவா’ ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வந்தார்.

அலுவலகத்தில் பொருட்களை கொடுத்து விட்டு திரும்பிய போது, அவரது ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில், சிறுவன் ஒருவன் காயமடைந்தான். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஸ்கூட்டர், மின் கம்பங்கள் கடும் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள், அமிர்தசரசின் காசா பகுதியில் உள்ள ராணுவ முகாம் அலுவலகத்தின் அருகே, இரவு 10:30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதை கேட்டு, ராணுவ முகாமில் இருந்தவர்களும், அப்பகுதி மக்களும் அலறியடித்தபடி ஓடி வந்தனர்.

இந்த விபத்தில், ராணுவ முகாமின் வெளிச்சுவரை ஒட்டியிருந்த தகர கொட்டகை சேதமடைந்தது. வெடி சத்தம் கேட்ட அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சத்தம் ஒன்றரை கி.மீ., துாரம் வரை கேட்டதாகவும், ராணுவ முகாமின் சுவர்கள் அதிரும் அளவிற்கு அதன் தீவிரம் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ராணுவ முகாம் மீது கையெறி குண்டுகள் வீசியது தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தாக்குதல் நடந்த இரு இடங்களிலும் போலீசார், தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரு பகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

ஜலந்தர் சம்பவத்தில் தொடர்புடைய ஸ்கூட்டர், ஆன்லைன் டெலிவரி செய்யும் குர்ப்ரீத் சிங் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்களில் ஏதேனும் சதித் திட்டம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரே இரவில், முக்கிய பாதுகாப்பு அலுவலகங்கள் முன் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால், மாநிலம் முழுதும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் வாகன தணிக்கையும் நடத்தப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.

உள்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் பகவந்த் மான், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கடந்த மாதம் 27ம் தேதி, பாட்டியாலாவில் உள்ள ஷம்புவில் சரக்கு ரயில் பாதையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இது தொடர்பாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., ஆதரவு பெற்ற காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவின் நான்கு உறுப்பினர்களை, போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜலந்தரில் நடந்த குண்டு வெடிப்புக்கு, காலிஸ்தான் விடுதலை படை என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.