2023-ஆம் ஆண்டில், இலங்கையில் 50 சதவீதத்திற்கு அதிகமான குடும்பங்கள் கடனில் சிக்கியிருந்தன. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவலின்படி, அவற்றில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதி குடும்பங்கள், தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மட்டுமே கடன்களை எடுத்திருந்தன. சிறு மற்றும் தனிநபர் கடன்களின் சுழற்சி தன்மை மற்றும் பெரும்பாலும் காணப்படும் சுரண்டல் இயல்பு காரணமாக, இக்குடும்பங்களில் அனேகமானவை இன்றுவரை கடன்சுமையில் மூழ்கியுள்ளன எனக் கருதப்படுகின்றது. இந்நிலை சமூக மட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்குவதோடு, தேசிய மட்டத்தில் கடனை அதிகரிக்கவும் வழிவகுக்கின்றது.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் மற்றும் சர்வதேச மட்டத்திலான இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், அரசு 2026ஆம் ஆண்டு மார்ச் மாத ஆரம்பத்தில் 2026ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தை நிறைவேற்றியது. பதிவு மற்றும் உரிமம் வழங்கும் செயல்முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுரண்டல் தன்மையுடையக் கடனளிப்பு நடைமுறைகளைத் தடுக்கவும், ஒழுங்குமுறை இல்லாத நுண்நிதி நடவடிக்கைகளின் எதிர்மறை விளைவுகளைத் தணிக்கவும் நோக்கம் கொண்டுள்ள இச்சட்டத்தின் நல்ல நோக்கங்கள் வரவேற்கத்தக்கதுடன், கோட்பாட்டு ரீதியாகவும் வலுவானவையாக உள்ளன. கொள்கை ரீதியில், நீண்டகாலமாக நுண்நிதித் துறையைப் பாதித்து வந்த பொறுப்பற்ற மற்றும் சுரண்டலான கடனளிப்பு மற்றும் வசூல் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதையும், அச்சுறுத்தல், கட்டாயப்படுத்தல் மற்றும் பாலியல் இலஞ்சம் உள்ளிட்ட கடுமையான முறைகேடுகளை ஒழிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், உண்மையான சிக்கல் — அல்லது இவ்விடத்தில் சொல்ல வேண்டுமெனில், கொள்கையின் குறைபாடு — இந்தச் சட்டத்தின் நுணுக்கமான விவரங்களில்தான் மறைந்துள்ளது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் தற்போதைய வடிவம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடையத் தவறுவது மட்டுமல்லாமல், முக்கியமான சமூக அடிப்படையிலான நிதி முறைமைகளை சிதைக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றது என்று துறைசார் நிபுணர்கள், கிராம மட்டத்தில் செயல்படும் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் அனைவரும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக உறுப்பினர்கள்—குறிப்பாக பெண்கள்—அத்துடன் சமூகக் கடன் திட்டங்கள், பெண்களின் பொருளாதார உரிமைகள் மற்றும் நுண்நிதி ஒழுங்குமுறை துறைகளில் பணியாற்றுபவர்களின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொண்டு அவற்றைச் சட்டத்தில் உள்வாங்க போதிய நேரம் ஒதுக்கியிருந்தால், இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம்.
முறையான சமூகக் கலந்தாலோசனையின்றி நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுவதனை எதிர்த்து, இலங்கையின் பல்வேறு சமூகங்களில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்து ஒரு மனுவை தயாரித்து கையொப்பமிட்டனர். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், பல்வேறு வகையான நுண்நிதிக் கடன்கள் குறித்த தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கக் கோரிய போதிலும், எப்போதும் போலவே, அவர்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
பெண்களின், குறிப்பாக ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பெண்களின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொண்டு உள்ளடக்கத் தவறினால், இந்தச் சட்டத்தினால் சூறையாடும் கடன் வழங்கல் மற்றும் வசூல் நடைமுறைகளை அர்த்தமுள்ள வகையில் கையாள வாய்ப்பில்லை. மேலும், தற்போதைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறுகிய வழிமுறைகள், பெரும்பாலும் பெண்கள் முன்னிலை வகிக்கும் சுய உதவிக் குழுக்களினால் நடத்தப்படும் முக்கியமான மற்றும் பயனுள்ள சமூக அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை சட்டவிரோதமாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
சுய உதவிக் குழுக்கள் என்பவை நம்பிக்கை அடிப்படையாகக் கொண்ட, சுயமாக நிர்வகிக்கப்படும், இலாப நோக்கற்ற சமூகத் தளங்களாகும். இவை, கூட்டு முடிவெடுப்பின் மூலம் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் கூட்டு அதிகாரமளித்தலையும் மேம்படுத்துகின்றன. சமூக அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள் என்பன சுய உதவிக் குழுக்களின் மையமாகக் காணப்படுகின்றன. இவை பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் குறைந்த சேவைக் கட்டணத்துடன், விரைவாகவும் புரிதலுடனும் கடன்களைப் பெறுவதற்கான பாரிய வாய்ப்பை வழங்குகின்றன. இருப்பினும், சுய உதவிக் குழுக்கள் கடன் பெறுவதற்கான அணுகலை விடவும் மேலதிகமான பல நன்மைகளை வழங்குகின்றன. இவை கல்வி மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம், குடும்பங்களும் சமூகங்களும் செழிப்படைய உதவுகின்றன. இவை இயற்கை மற்றும் தனிப்பட்ட பேரழிவுகளின் தாக்கத்தை குறைத்து, தனிநபர்களை கௌரவத்துடன் மீண்டும் கட்டியெழுப்ப உதவுகின்றன. மேலும் இவை உறுப்பினர்கள் தங்கள் அறிவை ஒன்றிணைத்து, மாற்றத்திற்காக பரிந்து பேச அல்லது உள்ளூர் சந்தைகளில் தங்கள் வணிகங்களை வலுப்படுத்தவும் உதவுகின்றன. அவை பெண்களை வலுப்படுத்தி, சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்துவதோடு, துஷ்பிரயோகமான நடத்தையைத் தடுக்க உதவுகின்றன. அத்தோடு, சமூக அடிப்படையிலான தொழில்களை ஒருங்கிணைந்த கொள்முதல் செய்யவும் அல்லது சந்தைகளுக்கு அதிக அணுகலைப் பெறவும் பயன்படுத்த உதவுகின்றன. இறுதியாக, இவை உறவுகளை மேம்படுத்தவும், திறன்களை வலுப்படுத்தவும், தேசிய வளர்ச்சிக்குப் பங்களிக்கும் செழிப்பான சமூகத்தை உருவாக்கவும் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆதரவானச் சூழலை வழங்குகின்றன.
சட்டத்தின் அதிகப்படியான இணக்கத் தேவைகள் மற்றும் அதன் செலவுமிக்க, குறுகிய மற்றும் சுமையான பதிவு நடைமுறைகள், சமூக அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை அழித்துவிடும். இதனால் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கு நிதி உதவிக்கான வாய்ப்புகள் குறைந்து, அவர்களைச் சுரண்டலுக்குள்ளாக்கும் கடன் வழங்குநர்களிடம் மேலும் சிக்க வைத்து, நிறுவன ரீதியாக ‘கடன் பெறத் தகுதியற்றவர்கள்’ என வரையறுக்கப்பட்டு, அவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மேலும், சமூக அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள் இல்லாமல் போனால், சுயஉதவி குழுக்கள் சிதைந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால், அதன் தொடர் விளைவுகள் குழு உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனைத் திருத்த இன்னும் காலதாமதமாகவில்லை என்பதே ஒரு நல்ல செய்தி. சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருப்பதனால், சில எளிய மற்றும் நியாயமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒழுங்குமுறை செய்யப்படும் கட்டத்தில் அதை வெகுவாக மேம்படுத்த முடியும்.
(1) சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது சமூகமட்டத்திலான கள யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், குறிப்பாக பால்நிலை அடிப்படையிலான பாதிப்புகள் குறித்த புரிதலை உறுதிசெய்யும் வகையில் சமூக மட்டத்திலுள்ள பெண்கள், கலந்தாலோசிக்கப்பட்டு சட்ட வரைவு தயாரிப்பு செயல்முறையில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
(2) நுண்நிதி நிறுவனங்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் சமூகக் கடன் திட்டங்களின் ஏனைய வகைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
(3) வர்த்தக நோக்கமற்ற, பெண்களால் வழிநடத்தப்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதுபோன்ற திட்டங்கள் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக செயல்படுவதற்கு ஒரு கூடுதலான வழிமுறையைச் சேர்க்க வேண்டும். இந்த வழிமுறையானது, குறைந்த நிர்வாகச் சுமைகளைக் கொண்ட, அதிக செலவில்லாத, சமூகம் சார்ந்த திட்டங்கள் தன்னாட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிப்பதான ஒரு எளிய, சமூக அளவிலான செயல்முறையை உள்ளடக்கி, குறைந்தபட்ச அதிகாரத்துவ மற்றும் ஒழுங்குமுறைப் பணிகளுடன் பதிவை அனுமதிக்க வேண்டும்.
(4) நுகர்வோர் பாதுகாப்பை சட்டத்தின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
(5) வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்க வேண்டும்.
(6) சமூகத்தால் வழிநடத்தப்படும் வர்த்தக மற்றும் வர்த்தக நோக்கமற்ற திட்டங்களுக்கு வேறுபட்ட அடமானத் தேவைகளை உள்ளடக்க வேண்டும்.
(7) பாலியல் இலஞ்சம் உட்பட, வற்புறுத்தலான வசூல் நடைமுறைகளுக்கு எதிரான பாதுகாப்புகளை உள்ளடக்கி, இந்த நடைமுறைகளை ஒழுங்குமுறை மீறல்களாகப் பட்டியலிட வேண்டும். இத்தகைய மீறல்கள் நிகழும்போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யும் விதிகளை உருவாக்க வேண்டும்.
(8) ஒழுங்குமுறை தீர்மானங்களுக்கு எதிராக ஒரு தெளிவான மேல்முறையீட்டு வழிமுறையை உள்ளடக்குதல் மற்றும் கடன் வாங்குபவர்களின் சட்டப் பிரதிநிதித்துவத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை இணைப்பதன் மூலம், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம் அதன் முக்கிய இலக்குகளை அடையவும், அதிகமாகப் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களை அர்த்தமுள்ள வகையில் பாதுகாக்க முடியும்.
எழுதியவர்: சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம்