சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக்கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் அவர்களது அன்புக்குரியவர்களால் நினைவுகூரப்பட்டனர்.

அதற்கமைய போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதமோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அம்மோதலில் உயிர் பிழைத்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி போரின்போதும், இறுதிக்கட்டப்போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், தாம் அனுபவித்த துயரங்களுக்கு சாட்சியாக நிற்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக ஆவணப்படுத்தப்பட்டதன் பிரகாரம், மோதலின்போது இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் உடனடித் தேவையை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகப் பக்கச்சார்பற்றதும், நம்பகரமானதுமான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்வதாக இலங்கை உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பலமுறை வாக்குறுதியளித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் அவ்வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன.

நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக்களை சீர்குலைப்பதுடன் மாத்திரமன்றி, சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்பதையும் காண்பிக்கின்றது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ்ச்சமூகங்களுடனான கலந்துரையாடலின்போது, நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பன நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்துடன் அர்த்தமுள்ள ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் அலைன் பியர்ஸன் கூறியதாவது:

கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுடன் தோளோடு தோள் நிற்பதற்கும், இந்தத் தருணத்தை நினைவுகூருவதற்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இங்கே நிற்கவேண்டியது மிக அவசியமாகும்.Beaches & Islands

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் 17 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. பல குடும்பங்கள் இப்போதும் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்த மீறல்களை நிகழ்த்திய குற்றவாளிகள் என்றேனுமொரு நாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக்கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மிக நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடும்போது, அவர்கள் வெகுவாக சோர்வடைந்திருப்பதை உணரமுடிகிறது. அவர்கள் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதை விரும்புகிறார்கள். இத்தகைய மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதமே அதுவாகும்.

தற்போதைய அரசாங்கம் கூட, ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பதாகப் பொறுப்புக்கூறல் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய நேரம் இதுவாகும். 17 ஆண்டுகளின் பின்னராவது ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட்டிருப்பதை உறுதிசெய்யவேண்டும். அரசாங்கம் கவனம்செலுத்தவேண்டிய முன்னுரிமைக்குரிய பல விடயங்கள் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இலங்கை வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயத்திலிருந்து நாடு முன்நோக்கிப் பயணிக்கவேண்டுமானால், இவ்விவகாரத்துக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.

“இறந்தவர்களால் நீதிக்காகப் பேச முடியாது; நாம்தான் அவர்களுக்காகப் பேச வேண்டும்” – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்