பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்

the Sri Lanka Petroleum Corporation

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையின் விலைக்கேற்ப தேசிய மட்டத்தில் விலை அதிகரிக்கப்படவில்லை. விலை திருத்தத்தின்போது திறைசேரியும், பெற்றோலிய கூட்டுத்தாபனமும் ஒருதொகையை செலுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எதிர்வரும் காலப்பகுதியில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நேற்று புதன்கிழமை (03-06-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில், தேசிய மட்டத்தில் விலை குறைவடையவில்லை என்று அரசியல்தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நட்டமாக்கி, குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

எரிபொருள் கொள்வனவு செய்யும் விலைக்கும், விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் பாரியதொரு பற்றாக்குறை காணப்பட்டது. இந்த முறையற்ற செயற்பாட்டினால் தான் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எரிபொருள் கொள்வனவுக்கான டொலரை திரட்டிக் கொள்வதற்கு கூட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் முடியாத நிலை ஏற்பட்டது.

எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு, நாட்டில் பாரியதொரு நெருக்கடி ஏற்பட்டு முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது. அவ்வாறான நிலைக்கு நாட்டைத் தள்ளியவர்கள் தான் இன்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

மத்திய கிழக்கில் மோதல் நிலைமை ஆரம்பமான தினத்தில் இருந்து இன்றுவரை பூகோள எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையிலும் மசகு எண்ணெய் விலை தளம்பல் நிலையில் உள்ளது. எரிபொருள் விநியோகம் என்பது பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளது என்பதால் எரிபொருள் விநியோகத்தை நெருக்கடிக்குள்ளாக்க கூடாது என்பதில் மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருளுக்காக செலவழிக்கும் டொலர் அதிகளவில் காணப்படுகிறது. இந்த மாதம் எரிபொருள் கொள்வனவுக்காக 318 மில்லியன் டொலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் கொள்வனவுக்கான டொலரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே திரட்டிக் கொள்ள வேண்டும்.கடந்த காலங்களை போன்று திறைசேரி நிதி ஒதுக்காது.

உலக சந்தையின் விலைக்கு அமைவாக எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுவதில்லை. எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும் போது திறைசேரி ஒருதொகையையும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒருதொகையையும் ஏற்கிறது.ஒட்டுமொத்த சுமைமையும் மக்கள் மீது சுமத்தவில்லை.ஆகவே குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறோம்.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையின் விலைக்கேற்ப தேசிய மட்டத்தில் விலை அதிகரிக்கப்படவில்லை.சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எதிர்வரும் காலப்பகுதியில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும். எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மத்திய கிழக்கின் நிலைமை சீரானவுடன் எரிபொருள் விலை குறைவடையும் சாத்தியம் காணப்படுகிறது. அவ்வாறு இடம்பெற்றால் அதன் பயனை மக்களுக்கு வழங்குவோம். விலையை அதிகரித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு கிடையாது என்றார்.

Related posts

இந்திய முதல்வர்களின் சொத்து வெளிப்படுத்தல் பட்டியல் வெளியீடு; தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மூன்றாவது இடத்தில்!

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!

உரத் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றனர் – இலங்கை தேசிய விவசாய ஒன்றியத்தின் தகவல்!