தமிழ்த் தேசியத்தை நேசித்த சமூகத் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் காலமானார்

Screenshot

பிறப்பு: 06-பெப்ரவரி-1934 | இறப்பு: 11- யூன்-2026

அமரர் சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர்

தமிழ்த் தேசியத்தை ஆழமாகவும் தூய்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் நேசித்த சமூகத் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் அவர்கள் யூன், 11, 2026 வியாழக்கிழமை ரொறன்ரோ – ஸ்காபரோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். தமிழர் சமூகத்தில் “மாஸ்ரர்” என அன்போடு அழைக்கப்பட்ட அவர், தாயகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் அர்ப்பணித்த வாழ்வின் ஒளிக்கோப்பையாக விளங்கினார்.

நெல்லியடி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு, மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகக் பணிபுரிந்த, சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் அவர்கள் எண்பதுகளின் இறுதியில் கனடா வந்திருந்தாலும், தாயகத்தின் மீதான அவரது பற்றும் பாசமும் ஒருபோதும் குறையவில்லை. தாயகச் சிந்தனையுடனும் தேசியப் போராட்டத்தின் மீதான ஆழ்ந்த அக்கறையுடனும் வாழ்ந்த அவர், தமிழ்த் தேசியத்தின் வரலாறு, தியாகம், நோக்கம் ஆகியவற்றைப் பற்றியே எப்போதும் உரையாடுவார். சிறந்த பேச்சாளராகவும் நேர்மையான சமூகப் பணியாளராகவும் அவர் பெற்றிருந்த மரியாதை, தமிழர் சமூகத்தில் அவருக்கு உயர்ந்த பொறுப்புகளை தானாகவே தேடித்தந்தது.

தமிழ்க் கூட்டுறவு இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர், தமிழீழச் சங்கத்தின் தலைவர், உலகத்தமிழர் இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளில் அவர் ஏற்ற பொறுப்புகள், அவரது அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும் வெளிப்படுத்துகின்றன. எந்தப் பொறுப்பையும் அவர் மனமார ஏற்று, சமூக நலனுக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

அவரது தூய்மையான உழைப்பையும், தமிழ்த் தேசியத்திற்கான அவரது உண்மையையும் கௌரவிக்கும் வகையில், கனடியத் தமிழர் தேசிய அவை உட்பட பல்வேறு சமூக அமைப்புகள் அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன. சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பங்களிப்புகள், கனடா வாழ் தமிழர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழ்த் தேசியத்தை உயிராகக் கொண்டிருந்த இந்த மாமனிதரின் மறைவு, கனடா தமிழர் சமூகத்திற்குப் பெரும் இழப்பாகும்.

சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் அவர்களுக்கு “கனடா உலகத்தமிழர்” பத்திரிகை கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

கனடா உலகத்தமிழர்

Related posts

ஞாயிற்றுக்கிழமை ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்

செம்மணி மனித புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

2029 நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அர்ச்சுனா ராமநாதன் எம்.பி.