புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பாண்டியன் வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாலம் அமைக்கும் பணியை ரவிகரன் செவ்வாய்க்கிழமை (16.06.2026) நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகில் இருந்த பாண்டியன் வீதிப் பாலம் கடந்த டித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது. இப்பாலம் உடைப்பெடுத்ததால் பாண்டியன் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 03.11.2025 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் கள நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், உடைப்பெடுத்த பாலத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பாண்டியன் வீதிப் பாலத்தை அமைப்பது தொடர்பில் ரவிகரன் தொடர்ச்சியாக உரிய தரப்பினரை வலியுறுத்தி வந்தார்.

கடந்த 14.05.2026 அன்று இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இப்பாலத்தை சீரமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும், வீதியால் பயணிப்போருக்கும் ஆபத்தினை ஏற்படுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ள அந்த சேதமடைந்த பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை விரைவாக மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.

அந்த வகையில் இந்த பாலத்தின் சீரமைப்புப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், விரைவில் சேதமடைந்த பாலத்தினை சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறாக தொடர்ச்சியாக ரவிகரன் வலியுறுத்தியதற்கமைவாக குறித்த பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பாலத்தை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பணி நிலைமையை பார்வையிட்டிருந்தார்.

அத்தோடு வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளருடன் தொலைபேசியில் உரையாடிய ரவிகரன், விரைவாக பாலத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு தெரிவித்தார்.

அதேவேளை விபத்துக்கள் ஏற்படாதவாறு பாலம் அமைக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இயல்தகு விரைவில் குறித்த பாலத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், விபத்துக்கள் ஏற்படாதவாறு குறித்த பாலம் அமைக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதாகவும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

Related posts

அண்டார்டிக்காவில் வெப்ப அலை: பனிக்கட்டங்கள் அதிவேகமாக உருகுகின்றன

இந்தியா தற்காலிகமாக டெலிகிராமை முடக்கியது: தேர்வு மோசடி விசாரணை தீவிரம்

காங்கோவில் எபோலா பரவல் வரலாற்றிலேயே மிக மோசமானதாக மாறலாம் – ஆப்ரிக்கா CDC எச்சரிக்கை