திருகோணமலை | 03.11.2026

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு பின்னணியே காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவலின்படி, நேற்று (2) இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து கப்பல்துறை சந்தி நோக்கி வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த இருவரில் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுப்பதற்காக வண்டியை விட்டு கீழே இறங்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கடற்படை வீரர் ஆவார்.
ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவரும் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு ‘டி-56’ ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருகின்றனர்.