Friday, November 6, 2026

புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு வெறும் 7 இலட்சம் நிவாரணமா? 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்!

சென்னை, தமிழகம் | 06.11.2026

சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கின்றன. கடலை நம்பி உழைக்கச் சென்ற உறவுகள், கரைக்குச் சடலங்களாகத் திரும்பும் கொடுந்துயரத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவ மக்கள் சுமப்பது? உயிரிழந்த மீனவச் சொந்தங்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தி, அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து, இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

முரசு புயலால் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகுக்குள் தண்ணீர் புகுந்து, நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்ததால், ஆபத்தில் சிக்கிய மீனவர்கள் உதவி கோரிய நிலையில், தக்க நேரத்தில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாததால் மீனவர்கள் உயிரிழந்துள்ளது மிகுந்த மனவலியை தருகிறது. மீனவர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்கள் எப்போது உதவி கோரினர்? அவர்களின் அபயக்குரல் எப்போது அரசின் செவியை எட்டியது? அதன்பேரில், அரசு என்னென்ன மீட்பு நடவடிக்கைகள் எடுத்தது? அவர்களை உயிருடன் கரைசேர்ப்பதில் எங்கு தவறு நேர்ந்தது? என்பவற்றை தவெக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.

புயல் எச்சரிக்கையை அறிவித்துவிட்டால் மட்டும் அரசின் கடமை முடிந்துவிட்டதா? ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்துவிட்டதை அரசு உறுதிசெய்ய வேண்டாமா? மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு தவெக அரசு அரசின் பதிலென்ன?

மீனவர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலும் காட்டுங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே! மீனவர்கள் வாழும் கடற்கரை நிலம் அரசின் கண்களுக்குத் தெரிகிறது; அந்தக் கடலில் அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் கடின வாழ்க்கை தெரியவில்லையா? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முந்தைய அரசு 10 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது. கரூரில் உங்களை பார்க்க வந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 20 இலட்ச ரூபாயும், அரசு வேலையும் கொடுத்த முதல்வர் விஜய் அவர்கள், தங்களின் சொந்த குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்ற பொறுப்போடு உழைக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு துயர்துடைப்பு நிதியாக வெறும் ஏழு இலட்ச ரூபாய் மட்டும் தருவது நியாயம்தானா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைவிட, கரூரில் உங்களை பார்க்க வந்து உயிரிழந்தவர்களைவிட, நடுக்கடலில் உழைக்க சென்று உயிரிழந்தவர்களின் உயிர் ஒன்றும் மலினமாகபோய்விடவில்லையே? எப்படி பார்த்தாலும் உழைக்க சென்று, அரசின் உதவி உரிய நேரத்தில் கிடைக்காததால் உயிரை இழந்தவர்கள் உயர்ந்தவர்களே! அவர்கள் வீட்டிலும் படிக்கும் பிள்ளைகள், திருமணமாக வேண்டிய பெண்கள், வயதான பெற்றோர் இருப்பார்கள்தானே? அவர்களுக்கு உரிய துயர் துடைபு உதவியை செய்வது அரசின் கடமையல்லவா? அதை முழுமையாக செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்? மேட்டூர் அணையைத் திறக்கவே 6 கோடி செலவு செய்யும் நீங்கள், மீனவச்சொந்தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதை எது தடுக்கிறது?

கடலில் மீனவர்களின் இருப்பிடத்தைத் தொடர்ந்து கண்டறியும் வசதி, ஆழ்கடலிலும் செயல்படும் தகவல்தொடர்புக் கருவிகள், அவசர அபாய அறிவிப்புக் கருவிகள், தரமான உயிர்காக்கும் மிதவை ஆடைகள் உள்ளிட்டவற்றை அனைத்து மீனவர் பெருமக்களுக்கும் வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். படகுகளின் பாதுகாப்புக் கருவிகளை முறையாகப் பரிசோதிப்பதுடன், இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களை தொடங்க வேண்டும். அண்டை மாநிலங்கள் மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்த ஒருங்கிணைந்த மீட்புத் திட்டத்தை தொடங்கி, இனியும் மீனவர்கள் உயிரிழக்கும் இத்தகைய கொடுந்துயரங்கள் தொடராதவாறு தமிழ்நாடு அரசு தடுத்திட வேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு தன்னுடைய அலட்சியத்திற்குப் பொறுப்பேற்று புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Comment