தமிழீழத்தேசியத்தலைவரின் வரலாற்றுச்சிறப்புமிக்க பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழதாயகத்தில் காத்து கிடந்த நாள் 10.04.2002
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 10.04.2002 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மாநாடு 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை மணி நேரம் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.
அங்கே பலதரப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை வழங்கியிருந்ததுடன் சமாதான முயற்சிகள் பற்றியும் ஊடகவியலாளர் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்தார்
2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி, ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுவதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.
தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது.
அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை.
இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு தேதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங்களதேசத்தையும் இணைக்கும் ஏ9 பாதை திறந்துவிடப்பட்டது. தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும்.
தமிழீழ விடுதலையின் மூலஇயக்கு சக்தியான தேசியத்தலைவர் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு பேட்டிகள் வழங்கி இருந்தாலும் 2002 ஏப்ரல் 10ம்நாள்தான் விடுதலைப்புலிகள் தமது தலைவருடன் உலக பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் அழைப்பை விடுத்திருந்தனர்.
உலக ஊடகங்களுக்கும் இது வித்தியாசமான ஒரு அனுபவமாகவே அவர்கள் பதிந்தார்கள்.
