பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களிற்கு “மாமனிதர்” மதிப்பளிப்பு.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குக் கலைத்துறை ஊடாகப் பேராதரவு நல்கி, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் “பாசறைப்பாணர்” என்ற மதிப்பளிப்பினை பெற்றிருந்த தேனிசை செல்லப்பா அவர்கள், உடல்நலக்குறைவினால் சாவடைந்தாரெனும் செய்தியறிந்து பெரும்துயர் கொள்கின்றோம்.
இவர், இளவயதிலேயே தமிழ்மொழி மீதான பற்றும் கலைவாழ்வின்மீதான ஆர்வமும் கொண்டிருந்தமையினால், சி.பா. ஆதித்தனார் அவர்களது தலைமையிலான நாம் தமிழர் இயக்க மேடைகள் உட்பட, தமிழ்நாட்டில் தனது கம்பீரக்குரலால் பாடல்களைப் பாடியும் நாடகங்களில் நடித்தும் பல அரங்குகளைத் தமிழின உணர்வோடு ஆர்ப்பரிக்கச் செய்தவராவார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் பின்னாளில் தமிழீழக் கல்விக்கழகத்தின் பொறுப்பாளருமான திரு.பேபி சுப்பிரமணியம் அவர்களின் தொடர்பாடல் மூலமாக, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களைத் தமிழ்நாட்டிலே சந்தித்த நாளிலிருந்து, அவர் மீது பேரன்பையும் பெருமதிப்பையும் இவர் கொண்டிருந்தவராவார். ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறுபட்ட விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களது ஏகப்பிரதிநிதிகள் என்பதிலும் உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்கள் இவ்விடுதலைப்போராட்டப் பயணத்தில் உணர்வு ரீதியாக திரட்சிகொள்ளவும் அதற்கான வளங்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதிலும் தீராத தாகம் கொண்டு, தன்னுடைய உயிரோட்டமான காந்தக்குரலால், தமிழின விடுதலைக்குப் பலம் சேர்ந்த பெருமகனாவார்.
தமிழீழத் தேசியத்தலைவரின் அழைப்பினையேற்று, தனது அணிசேர் கலைஞர்களோடு 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழத்திற்கு வருகைதந்து, யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே நிகழ்த்திய இசைவேள்வியில் இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டிருந்தமை விடுதலை வீச்சின் எழுச்சியை வெளிப்படுத்தியிருந்தது. தொடர்ந்து தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியே இசைநிகழ்வை நிகழ்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பத்திற்குரியவராகத் தன்னை முத்திரை பதித்துக்கொண்டவராவார். களங்களிலே போர்க்கருவியேந்திப் போராடிய போராளிகளின் போர்வலிகளையும் அவர்களிடமிருந்த அசைக்க முடியாத விடுதலைத்தாகத்தையும் மட்டுமல்லாது, சிறிலங்கா, இந்தியா மற்றும் இரண்டகர்களின் தமிழ்மக்களிற்கு எதிரான இனஅழிப்பு உட்பட, காலத்தின் தேவையறிந்து
கவிஞர்களாலும் தன்னாலும் வரையப்படும் கவிவரிகளிற்கு தன் காந்தக்குரலாலும் இசையாலும் உயிர்கொடுத்து, திசைவெளியெங்கிலும் பரவச்செய்த பெரும் விடுதலைப்பணியை ஆற்றியவராவார்.
ஐரோப்பிய தேசமெங்கிலும் தன் இசைப்பயணத்தை மேற்கொண்டு, எமது விடுதலைக்கு உரமூட்டியதோடு, இறுதிவரை தனது உணர்வுபூர்வமான விடுதலைப்பாடல்கள் மூலம் மக்களின் மனதில் விடுதலைத்தீயை அணையாமல் பாதுகாத்தவராவார்.
தமிழீழ விடுதலை மீதான பற்றுறுதியோடு, தமிழின உணர்வின் ஆணிவேரிற்குத் தன்காந்தக்குரலால் உரமூட்டிய இப்பெருமகனை இழந்து, துயருற்று வாடும் இவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிற்கு எமது ஆறுதலைத் தெரிவிப்பதோடு, இவரது இனப்பற்றிற்கும் தமிழீழ விடுதலைப்பற்றிற்குமாக, தமிழீழத் தேசிய உயர்விருதான “மாமனிதர்” என்ற உயர் விருதினை வழங்கி, மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.