ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்டவிரோத விடுதிகள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, கோவையை சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் ஆர்.கற்பகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி.கே.முத்துகுமார் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், 87 விடுதிகள் உள்ளன.
‘அதில் எந்த விடுதியும் உரிய அனுமதி பெறவில்லை. குடியிருப்புகளை வணிக நடவடிக்கைக்காக பயன்படுத்த, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘சட்டவிரோதமாக செயல்படும், 87 விடுதி களையும் உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தகட்டமாக, இந்த கட்டுமானங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.
அப்போது, மனுதாரர் தரப்பில் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜராகி, ‘ஏற்கனவே மூடப்பட்ட, சில விடுதிகள், பின்வாசல் வழியாக செயல்படுகின்றன’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘உரிய உரிமங்கள் இல்லாமல் செயல்படும் இந்த விடுதிகளை, ‘சீல்’ வைக்க வேண்டும். இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, நவ., 27ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.