அமெரிக்கா | 04.11.2026
50 மாகாணங்களை கொண்ட அமெரிக்காவில் அதிபர் பதவியேற்ற பின் 2 ஆண்டுகளில் நடப்பதே இடைக்கால தேர்தல் ஆகும். செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 மாகாணங்களில் ஓட்டுப்பதிவு நிறைவு அடைந்தது. இந்த மாகாணங்களில் முதற்கட்ட தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரங்கள் வெளியானதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது.
வர்ஜீனியாவிலிருந்து செனட் சபைக்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புளோரிடாவின் 20வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டெபி வாசர்மேன் ஷுல்ட்ஸ் மீண்டும் வெற்றி பெற்றார். மற்ற மாகாணங்களில் படிப்படியாக ஓட்டுப்பதிவு நிறைவடையும். பிறகு ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.
தேர்தலில் விண்வெளியிலிருந்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஓட்டளித்தனர். பூமிக்கு மேலே 400 கி.மீ.க்கும் அதிகமான உயரத்தில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, அனில் மேனன் உட்பட மூன்று நாசா விண்வெளி வீரர்கள் ஓட்டளித்துள்ளனர். விண்வெளியில் வசிக்கும் விண்வெளி வீரர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை அனில் மேனன் இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”விண்வெளியில் இருந்தும் கூட ஓட்டளிக்கலாம்; விண்வெளி நிலையத்தில் இருந்து ஓட்டளிக்கும் சிறப்புரிமை கிடைத்தது. நாங்கள் மின்னணு வாக்குச்சீட்டைப் பூர்த்தி செய்து, அதனைத் தேர்தல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம்” என குறிப்பிட்டுள்ளார். சக நாசா விண்வெளி வீரர்களான லூக் டெலானி மற்றும் ஜெசிகா வாட்கின்ஸ் ஆகியோரும் மின்னணு வாக்குச்சீட்டுகளைப் பூர்த்தி செய்து, அவற்றை தேர்தல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பாக அனுப்பியதாக அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாக்ஸ் நியூஸின் மதிப்பீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன (27%), முன்பு பாக்ஸ் நியூஸ் பார்த்து, இப்போது பார்க்காத அந்த மக்கள் அனைவருக்கும் இது புரிகிறது. தவறு அவர்களுடையது, என்னுடையதல்ல; என்னுடைய மதிப்பீடுகள் முன்னெப் போதையும் விட சிறப்பாக உள்ளன.
புதிய சிஎன்என் கருத்துக் கணிப்பின்படி, குடியரசுக் கட்சியினரிடையே ‘ட்ரம்ப்’ 99% ஆதரவையும், குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளிடையே ‘ட்ரம்ப்’ 53% ஆதரவையும் பெற்றுள்ளார். பாக்ஸ் நியூஸின் மதிப்பீடுகள் சரிந்து வருவதில் ஆச்சரியமில்லை, மேலும் அவை இன்னும் வெகுவாகக் குறையப் போகின்றன. அவை வெகுவாகக் குறைந்ததற்குக் காரணம் நான் அல்ல, மாறாக அவர்கள் எனக்கு எதிராக இருப்பதுதான், இது இதற்கு முன்பும் ஒருமுறை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.