மதுரை | 04.11.2026
மதுரை சிறையில், மூர்த்தி (35) என்ற கைதி, தலைமை காவலர் தெய்வனாயகம் (52) என்பவரைத் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீரைப் பயன்படுத்தி மூர்த்தி குளிக்க முயன்றதைத் தடுக்க அந்த காவலர் தலையிட்டபோது, அவரது வாளியைப் பறிமுதல் செய்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மதுரை சிறையில் 2,000த்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அங்கு, நேற்று காலை குளிப்பதற்காக, விசாரணை கைதிகள் உள்ள பகுதியில் நுாற்றுக்கணக்கான கைதிகள் கூடினர். அப்போது, பாதுகாப்புக்கு நான்கு காவலர்கள் தான் இருந்தனர். கைதிகள் குளிக்க ஆழ்குழாய் நீர் உள்ள நிலையில், கைதி மூர்த்தி என்பவர், குடிநீரில் குளிக்க வாளியில் தண்ணீர் பிடித்தார். இதைக் கவனித்த தலைமைக் காவலர் தெய்வநாயகம், கைதியைக் கண்டித்து வாளியைப் பறித்தார்.
ஆத்திரமடைந்த மூர்த்தி, தன் கைகளால் தெய்வநாயகத்தின் முகத்தில் குத்தினார். இதில், தெய்வநாயகத்தின் கண்கள் பாதிக்கப்பட்டன. அருகில் இருந்த சில கைதிகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வந்த சக காவலர்கள், தெய்வநாயகத்தை சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். கைதி மூர்த்தியிடம் விசாரணை நடக்கிறது.
சிறைக் காவலர்கள் கூறுகையில், ‘தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியதால், மதுரை சிறையில் காவலர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் விழிப்புடன் பணிபுரிவதால் கைதிகள் ஆத்திரத்தில் உள்ளனர்.
‘கைதிகளின் மிரட்டலால் அச்சத்தில் உள்ளோம். எங்களைத் தாக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவே கைதிகளுக்கு பாதிப்பு என்றால் மனித உரிமை கமிஷன், தன்னார்வ அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. நாங்கள் பாதிக்கப்பட்டால், எங்கள் துறை அதிகாரிகள் கூட ஆறுதலாக பேசுவது இல்லை.
25 ஆண்டுகளுக்கு முன் சிறையில் ஒரு அதிகாரி எரித்துக் கொல்லப்பட்டார். அதுபோல் மீண்டும் ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றனர்.