சென்னை – தமிழகம் | 11.11.2026
தீபாவளி நாளில் போதை கும்பலால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தாக்குதலும் சகஜமாக நடந்தன. போலீஸ் எஸ்எஸ்ஐ கொல்லப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தீவிர விசாரணை, சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 185 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 222 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
2வது நாளாக நேற்று (நவம்பர் 10) ரவுடி வேட்டையில், குற்றப்பின்னணி மற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 631 ரவுடிகள் உட்பட 769 நபர்களை பிடித்து விசாரணை செய்து, 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் இனி குற்றச் செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்கான நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 572 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 612 நபர்களின் இனிக் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீசார் தெரிவித்தனர்.