
வீரவேங்கை சமர்வேங்கை
ஆசைப்பிள்ளை சதீபன்
யாழ்ப்பாணம்
23.02.2007
23.02.2007 அன்று மன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.
📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss
தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.
பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.
ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வே. பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர்
ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விளக்கொன்றை நாம் இழந்துவிட்டோம்.
இழப்பின் ஆறாத சுவடை தாங்கி உலகத் தமிழினமே துயரக்கடலில் மூழ்கியுள்ளது.
விடுதலை இயக்கம் என்ற பெரும் குடும்பத்தின் மூத்த தலைமகனான “தேசத்தின் குரல்” பாலா அண்ணாவின் இழப்பு என்பது எவராலும் நம்ப முடியாததும் இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாததுமே. தனக்குச் சாவு நிகழப்போகும் தருணம் அறிந்திருந்தும் இம்மியளவும் கலக்கமின்றி தயக்கமின்றி இறுதிவரை உறுதியோடு இலட்சியம் பேசியவர் பாலா அண்ணா. “சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும், அந்தத் துணிவிலும் தெளிவிலும் விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக்கப்படுகிறது, நிறைவானதாக்கப்படுகிறது” என தானே குறிப்பிட்டதற்கு அமைவாக பாலா அண்ணா வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினார்.
அவரது தெளிவிலும் விழிப்பிலும் சுதந்திர தமிழீழம் நோக்கிய பாதை சுடர்விட்டுப் பிரகாசித்தது. எமது இனத்துடன், இனத்துயர் துடைக்க எழுந்த புரட்சிகர அமைப்புடனும் அதன் தலைமையுடனும் பின்னிப் பிணைந்த அவருடைய வாழ்க்கையும் தத்துவ விசாரணைகளும் விடுதலை பற்றிய புதிய அர்த்தத்தை உலகுக்கு எடுத்தியம்பியது.
எமது தேசியத் தலைவருடன் பாலா அண்ணைக்கு ஏற்பட்ட உறவு தமிழ்த் தேசிய விடுதலைத் தேரின் சக்கரங்களில் ஒன்றாகி அது உலகு எங்கெனும் உலவிவர பேருதவி புரிந்தது. அந்த விடுதலைப் பயணத்தில் சக பயணியாகவும் அவர் வீற்றிருந்தார்.
தேசியத் தலைவரின் உற்ற நண்பனாக, விடுதலை அமைப்பின் மூத்த அரசியல் ஆசானாக புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப தாயகத்திலே எமது தலைமையினால் எடுக்கப்படும் இராஜதந்திர திருப்புமுனைகள் நிரம்பிய முடிவுகளை அரசியல் விற்பன்னத்துடனும் சாணக்கியத்துடனும் நெறிப்படுத்தி வெளிக்கொணரும் இராஜதந்திரியாக அவர் விளங்கினார்.
பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட பாலா அண்ணாவின் உறவை “காலத்தால் கனிந்து வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு” என்கிறார் தேசியத் தலைவர்.எமது விடுதலைப் போராட்டம் அதனது புற அகக் காரணிகளினால் வனையப்பட்டு ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த காலத்தில் பாலா அண்ணா தன்னையும் இந்தப் போராட்டத்தில் பங்காளி ஆக்கினார். மேலைத்தேச, கீழைத்தேச தத்துவங்கள், மானுட வளர்ச்சி பற்றியதான ஆய்வு உலகிற்கும் தனது இன விடுதலைப் போராட்ட களத்திற்குமிடையே எதனைத் தேர்வு செய்வது என்ற நிலை வந்தபோது கேள்விகளின்றியே இன விடுதலையை பற்றிக் கொண்டார்.
அத்துடன் தெளிவான அரசியல் தரிசனமும் உருப்படியான செயற் திட்டமும் இல்லாத அப்போதைய தமிழ் தலைவர்களின் வீண் போக்கினால் தனது இனத்தின் உயரிய அபிலாசைகள், மானுட விழுமியங்கள் சிதைக்கப்படுவதை அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. மூன்று தசாப்தத்திற்கு மேலாக பயனின்றி கடைப்பிடித்து வந்த சாத்வீக அரசியல் அணுகுமுறை சாத்தியமற்றது என்பதனை உணர்ந்து அதனையே சகலருக்கும் உணரச் செய்து, ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர இயக்கத்திற்கு துணையாகி நின்றார்.
இதுவே காலத்தினால் கனிந்து வந்த உறவு என்கிறார் எமது தேசியத் தலைவர்.விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு உயிர்மூச்சாகவும் உந்து சக்தியாகவும் அது செயற்பட்டு வருகின்றது. ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில் ஒரு அரசியல் சக்தியாகவும், அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும் விடுதலைப் போரை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு உறுதியான கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான நீதியான அரசியல் இலட்சியம். நீண்டகால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொதுசனத்தின் பலமிக்க ஆதரவு இத்தனை பண்புகளையும் உடையது எமது விடுதலை இயக்கம் என முத்தாய்ப்பு வைத்ததுடன் அதனை சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்வதில் பாலா அண்ணா அயராது இயங்கினார். அதற்காக இறுதி மூச்சுவரை அவர் உழைத்தார். விவாத அரங்குகள், பேருரைகள், பேச்சுவார்த்தை மேசைகள், சர்வதேச மாநாட்டு அரங்குகள் என எங்கும் பாலா அண்ணையினது திண்மையான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது.
அத்தனையும் எமது இனத்தின ஆன்ம வலிகளைப் பற்றியதாகவே ஒலித்தன. விடுதலை இயக்கங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் தன்மையுணராது பயங்கரவாதம் என பச்சை குத்திப் பார்க்க முயலும் கொடூரமான உலகமொன்றை எதிர்த்து அவர் போராடினார்.
அந்தப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை போராடினார். தமிழரின் தேசிய இன விடுதலையின் அவசியம் பற்றியும் அதற்கான நீதியான போராட்ட வழிமுறை பற்றியும் அதன் நியாயத்தன்மை பற்றியும் ஓயும் வரை அவரது வாய் உரைத்துக் கொண்டேயிருந்தது.
விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற ஆரம்ப காலம் தொட்டு எமது தேசியத் தலைவரோடு கூடியிருந்து அனைத்து சோதனைகளையும் வலிகளையும் தாங்கி, சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் முகங்கொடுத்து செயற்பட்ட பாலா அண்ணாவின் பிரிவு உலகத் தமிழினத்தையே கலங்க வைத்திருக்கின்றது. அவரது பிரிவின் துயர் சர்வ உலகிற்கும் ஏற்படுத்தியிருக்கும் வேதனை அவர் வரித்துக்கொண்ட இலட்சியத்தின் பாற்பட்டதாகும்.
அவர் நேசித்த நெறிப்படுத்திய இன விடுதலை என்ற காலக்கனியே உலகத் தமிழினத்தின் வேண்டுகையாகவும் இருக்கின்றது. பூமிப் பந்தின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் கேட்கும் துயர மொழிகள் பாலா அண்ணையின் ஆத்ம தரிசனமான “தமிழீழ விடுதலை” என்பதனையே உரைத்து உறுதிப்படுத்தி நிற்கின்றது. அன்னாரின் மறைவு குறித்து கேட்கின்ற அத்தனை குரல்களும் தமிழின விடுதலைக்கான குரல்களே என்பதனை மறுப்பதற்கு எவருமில்லை.
அவர் மீதான நேசிப்பு என்பது அவருடைய நேசிப்புக்கள் மீதானவையே. அந்த வகையில் பிரிவு குறித்து அகிலம் எழுப்பிய குரல்கள் துயரக் கடலிலே மூழ்கியிருக்கும் எம்மக்களுக்கும் மண்ணுக்கும் பெரும் ஆறுதலுக்கும் உற்சாகத்திற்கும் வழி காட்டியிருக்கின்றது. அந்த வகையில் மதிப்புக்குரிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தேசத்தின் குரலுக்கு தனது இரங்கல் செய்தியை முதலில் தெரிவித்திருந்தார். தாய்த் தமிழகத்திலிருந்து உடனேயே ஒலித்த அவர் குரலுக்கு எமது அமைப்பின் சார்பில், தேசியத் தலைமையின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம். தமிழகத்திலிருந்து அனுதாபங்களைத் தெரிவித்த ஏனைய தமிழக தலைவர்களுக்கும், தமிழினப் பற்றாளர்களுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறிலங்காவிலிருந்து “தேசத்தின் குரல்” பாலா அண்ணாவின் மறைவுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும், தமிழ் விடுதலைப் பற்றாளர்களுக்கும் எமது அமைப்பினதும் தலைமையினதும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எமது இன விடுதலையை மூச்சாகக் கொண்ட பாலா அண்ணனின் இழப்புக் குறித்து கவலை தெரிவித்த நோர்வே நாட்டினுடைய தூதுவர்களுக்கும், அமைச்சர்களுக்கும். அரசியல் பிரமுகர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
“அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் உண்மைக்காக உழைத்தவர். எப்போதும் உண்மையே பேசியவர். எந்தக் காரணத்திற்காகவும் அவர் பொய் கூறியதில்லை” என கௌரவ அமைச்சர் எரிக் சூல்கெய்ம் அனுதாபச் செய்தி வழங்கினார். அவர் குறிப்பிட்ட பாலா அண்ணணின் உண்மைக்கான உழைப்பு என்பது தமிழீழ விடுதலைக்கானதே. உண்மையான நீதியான நியாயமான கோரிக்கைகளோடு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு போராட்ட அமைப்பின் தலைமகனாக பாலா அண்ணன் இருந்திருக்கிறார் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பது அவரின் அத்ம தாகத்திற்கு நிச்சயம் நீர் வார்க்கும்.
“தேசத்தின் குரல்” பாலா அண்ணையின் மறைவு குறித்து துயரக்குரல் எழுப்பிய உலகத் தமிழினத்திற்கு எமது அமைப்பினதும் தேசியத் தலைமையினதும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இலட்சியமான உரிமைப் போராட்டத்திற்கு பின்னால் உலகத் தமிழினமே அணிதிரண்டு ஒருங்கிணைந்து எழுப்பிய குரலாக இது சர்வதேசமும் ஒலிக்குமென நம்புகின்றோம். தமிழ் தேசிய விடுதலை ஒன்றே உலகத் தமிழினத்தின் ஏகோபித்த அபிலாசை என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளும். தேசத்தின் குரல் பாலா அண்ணையின் ஆத்ம தரிசிப்பு மிக விரைவில் நிறைவேறும்.
“தேசத்தின் குரல்” பாலா அண்ணையின் பின்னால் எல்லாமுமாக நின்ற உழைத்து இன்று அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அடேல் அன்ரி அவர்களோடு எமது கவலைகளை பகிர்ந்துகொள்கிறோம்.
பாலாண்ணையின் நீண்ட தேசப்பணிக்கு பலமாகவும் இயங்கு சக்தியாகவும் இருந்தவர் இவரே. உடலின் நோயுடனேயே உலவிய தேசத்தின் குரலுக்கு நல்ல துணைவி என்பதற்கப்பால் ஒரு தாதியாகவும், தாயாகவும் இருந்து கவனித்தவர் அவர்.
இன்று நேறறு என்றில்லாமல் மூன்று தசாப்த காலமும் விடுதலைப் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றியவர். தனது இலட்சிய புருசனாக பாலா அண்ணாவை அடைந்து உலகியல் வாழ்வியல் அனுபவங்களை தத்துவங்களில் தோய்த்து பருகும் பெரும் பேறு பெற்ற அடேல் அன்ரிக்கு எமது தேசத்தின் சார்பாகவும் தலைமையின் சார்பாகவும் ஆறுதலையும் பெரு நன்றியையும் செலுத்தும் பொறுப்புமிக்கவராகின்றோம்.
தொடர்ந்தும் எமது விடுதலைப் பயணத்தை தலை மகன், தேசத்தின் குரலின் ஆசீர்வதிப்புடன் முன்னெடுப்போம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ,
தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர்.

சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
25.12.1979 – 15.10.2006
15.10.2006 அன்று மன்னார் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா கடற் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராசதுரை சிறிதரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
03.05.1977 – 11.10.2006
11.10.2006 அன்று முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவு.
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி – முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட 20 மாவீரர்களின் 18 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிகர முறிடிப்புச் சமரில் லெப்.கேணல் துருபதன் உட்பட 20 வரையான போராளிகளும் துணைப்படை வீரர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.இம்மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வீரபத்திரன் பேரின்பராசா
கதிரவெளி, மட்டக்களப்பு
30.03.1973 – 07.10.2006
07.10.2006 அன்று முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவு.
வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டு மல்லவா? அவன் எங்கே போய்விட்டான்?
அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய படைகள் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் துயரப்படுத்தின. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். வண்டியில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை கொடுமைப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது.
பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறிய சிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண் டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான்.
அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது ஓயாத அலைகள் – 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் அமர்த்தப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத் தளத்தை இழக்க விரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்து தரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கே நடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்த போது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான்.
முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக ‘சத்ஜெய’ என்ற பெயரில் கிளிநொச்சியை வல்வளைப்பு படை நடவடிக்கையை தொடங்கியது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலி வீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகளுடன் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த அக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான்.
உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்து கணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தன. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான்.
ஏ – 9 சாலையைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில வல்வளைப்பிற்கு அப்போதைய சிறிலங்காவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ‘ஜயசிக்குறு’ படை நடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாமெனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப் படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும் பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான்.
போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடினபயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப் போராளிகளையும் ஊக்கப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித் தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான்.
பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக் கொள்வான். ஒருமுறை நண்பகல்வேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக் காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது கவனமின்றிச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எந்தவேளையிலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறைகூறவுமில்லை. தங்ககத்திற்குப்போய் விளக்குமாறினை எடுத்துக் கொண்டுவந்து தானே கிணற்றடியைச் தூமைப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக் கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் தூய்மைப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு இசையவில்லை. அன்றைய நாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே தூய்மைப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை.
அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒரு போதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வு காணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது.
நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு மே திங்கள் 13ம் நாள். புத்தபிரான் முன் சூளுரை எடுத்துக்கொண்டு வன்னி மீது ‘ஜயசிக்குறு’ என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடை போட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தான். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய் சந்தித்தது. எதிரி ஒவ்வொரு அடி நிலத்தையும் வல்வளைப்புச் செய்ய அதிகவிலை கொடுத்தான்.
25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கி நின்று சண்டை பிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை அன்பாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்த போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரி மீதான அவனின் சினம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை மேலாளரான அக்பர் களத்திலே தான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாள்ளி வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் கவனத்திற்கொள்ளாது டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். இறம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு படைக்காவியையும் அழித்து இரு டாங்கி களைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப் படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான்.
இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் நேர்த்தியான செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக் கொடுத்தான்.
10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை கடுமையாய் நடந்தது. எதிரியை நெருங்கி மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் நாட்டின்மீது மேற்கொள்ளும் வல்வளைப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச் சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு படைக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்த பின்னரே அக்பர் தளம் திரும்பினான்.
அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் வாய்ப்புக் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள்.
19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மூலப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு விழித்துக்கொண்ட எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழி நடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித் தலைவர்களும் போராளிகளும் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலை நிறுத்தினர்.
இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப் படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலை நடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான்.
ஓயாத அலைகள் – 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல் வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித் தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல் தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர்.
அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ – 9 பிரதான சாலையை அண்மித்திருந்தான். முன்னேறிய டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப். கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலிகொண்ட சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது.
இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்த நிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக விடுதலைக்காய் கொடுத்து ஆறு டாங்கி களை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப் படையின் பலத்தை விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது.
இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் ‘அல்பா – 1’. களத்திலே ‘அல்பா – 1’ வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் ‘அல்பா – 1’ இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவேளையிலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளி களின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு வேர்கள்.காம் எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்த இடத்திற்கு நெருங்கிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகர விடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும் வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான்.
ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது.
விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு ‘தீச்சுவாலை’ என்ற பாரிய இராணுவ நடவடிக் ஷகையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. ‘ஜயசிக்குறு’ களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் படைக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டு மொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை இல்லாநிலைக்கு கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படி எண்ணி இந்த விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிழை இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியை வைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப் போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான்.
அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல புதுமையான ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் சிறப்புப் பணிப்பின் பேரில் சென்று பணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒரு தளபதியாய் இருந்தபோதும் ஒரு இயல்பான போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான சொற்களைப் பயன்டுத்தி உரையாடுவதும், புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள்.
இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத் தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத் துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான்.
இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத் தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான்.
அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த தூயவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எந்த வேளையிலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்து முடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்ல மாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் படையச் சொத்து.
இத்தனை செயற்திறன் மிக்க வீரன் எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னேற்பாட்டுபோது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளை நொருக்கினார்கள். ”தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து” அக்பர் இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான்.
கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, ”அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடை சேர்ந்து எல்லாரும் உழைத்தால் விரைவில் விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே” என்று கூறி விட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும்.
நினைவுபகிர்வு:- ச.புரட்சிமாறன்
வெளியீடு: விடுதலைப்புலிகள் இதழ்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தேவதாஸ் சூரியவதணன்
12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
13.11.1980 – 24.09.2006
24.09.2006 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற் படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு.
1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடுகளைக் கவனித்த அப்போது கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல். நரேஸ் அவர்கள் ராடர் நிலையத்திற்க்கு செல்லும் போது இவனையும் அழைத்துச் சென்று அங்கே ராடரில் எப்படி இலக்குகளை இணங்கானுவது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அதன் நுணுக்கங்களையும் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்லிக் கொடுத்து அவனை ஒரு சிறந்த தொலைத்தொடர்பாளனாக வளர்த்துக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கைக்கெதிரான விடுதலைப்புலிகளின் புலிப்பாய்ச்சலுக்கான கடற்சமரில் லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய சீராளனோ தனித்துவிட்டவனாக உணர்ந்தபோதும்
தலைவர் அவர்களையும் மாவீரர்களையும் மனதில் நினைத்து
தனது வழமையான செயற்பாடுகளில் புதிய உத்வேகத்துடன் ஈடுபட்டான்.தொடர்ந்து லெப் கேணல் நரேஸ் அவர்களின் நினைவாக கடற்தாக்குதல் படையணி உருவாக்கப்பட்டபோது இவனும் அங்கே சென்றான். மேலதிக பயிற்சிகளை முடித்தவன்.கடல் விநியோகப் பாதுகாப்புச் மற்றும் கடற்சமர்களிலும் பங்குபற்றியவன்.
தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் மங்களேஸ் அவர்களின் தலைமையில்
மேற்கொள்ளப்பட்ட தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் செவ்வனவே பங்குபற்றினான்.அதனைத்தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்களின் வரவினையடுத்து அக்கனரக ஆயுதப் பயிற்சிக்கென உள்வாங்கப்பட்டவர்களுள் ஒருவனாக வந்த சீராளன் அப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.சிறந்த சூட்டாளனாக பயிற்சியை முடித்து வெளியேறியவன் கடற்புலிகளின் சாள்ஸ் படையணியில் இணைக்கப்பட்டு அக்கனரக ஆயுதத்துடன் கடற்சண்டைகளில் ஈடுபட்டான் .தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியால் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாக இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.சமாதன காலப்பகுதியில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்படைக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சிக் கல்லூரியான லெப் கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரிப் பொறுப்பாளனாக சிறப்புத்தளபதி அவர்களாள் நியமிக்கப்படுகிறான்.அப்பணியிலும் சிறந்து விளங்கி பல போராளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதுடன் தனது களஅனுபவங்களையும் சகபோராளிகளுக்கு படிப்பித்தான்.
சண்டை தொடங்கியவுடன் சண்டைப்படகின் கட்டளை அதிகாரயாகவும் .தொடர்ந்து சண்டைப் படகுகளின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.கடற்சண்டைகளில் மிகவும் திறம்பட படகுகளை ஒருங்கினைத்து செவ்வனவே வழிநடாத்தினான்.இப்படியாக படிப்படியாக வளர்ந்த ஒரு போராளி ,
நீண்ட கடற்சண்டை அனுபவமுள்ள ஒரு சண்டைக்காரன்,தனக்குத் தெரிந்தவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான்,
எந்த வேலையாகிலும் அதை சரியான முறையில் திருப்தியுடன் செய்த வீரன்.
சக போராளிகளை மதிக்கிற பன்பு. ஒரு சிறந்த நிர்வாகி . இப்படியாக சீராளனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட ஒரு வீரனை 24.09.2006 அன்று தென்தமிழீழ விநியோகப் பாதுகாப்பு சமரின் போது புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலின்போது நாம் இழந்துவிட்டோம்.
17.09.2006 அன்று காலை அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலான கரோஐசால் வழிமறிக்கப்பட்டு சண்டை

இந்தோனேசியாவிலிருந்த எமது படகுகளில் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பிற்க்குக் கொண்டு வந்து அங்கு நின்ற எமது கப்பலில் இருந்து தமிழீழத்திற்க்குத் தேவையான பொருட்களுடன். அலம்பிலுக்கு வருவதற்க்கான ஒரு திட்டம் கடற்புலிகளின் சர்வதேசக்கடற்பரப்பில் நின்றவர்களுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது.
அதற்கமைவாக அந்த நேரம் தமிழீழத்தில் நின்ற லெப்.கேணல் ஸ்ரிபன் தலைமையிலான ஒரு அணி உருவாக்கப்பட்டு அவ் அணிகளில் சர்வதேசக் கடற்பரப்பில் நின்றவர்களுடன் மேலதிகமாக தமிழீழத்தில் நின்றவர்கள் சிலரும் இணைக்கப்பட்டனர்.இவர்கள்தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வதற்காக தமிழீழத்திலிருந்து புறப்பட்டு சர்வதேசக்கடற்பரப்பினூடாக இந்தோனேசியா சென்று படகை எடுத்துக்கொண்டு கப்பலைச் சந்தித்து கப்பலில் உள்ள அந்த நேரம் தமிழீழத்திற்க்கு தேவையான முக்கிய பொருட்களுடன்
வந்துகொண்டிருந்தபோது 17.09.2006 அன்று காலை அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலான கரோஐசால் வழிமறிக்கப்பட்டு சண்டை நடந்தது ஒருகட்டத்தில் அதாவது மாலை கரோஐசால் முடியாத கட்டத்தில் விமாப்படையினர் அழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது .






இந் நடவடிக்கையில் லெப் கேணல் ஸ்ரிபன் உள்ளிட்ட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்தனர்.இச் சம்பவத்தில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ஸ்ரிபனின் இன்னும்
இரண்டு சகோதரங்கள் வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்திருந்தனர் .ஆனால் துரதிஸ்டம் இம் மூவரது வித்துடல்களும் மீட்கப்படவில்லை.ஸ்ரிபனை ஏற்கனவே இரணடு மாவீரர்கள் இருப்பதால் இவரை வீட்டுக்குச் செல்ல இயக்கம் அனுமதித்திருந்த போதிலும் இவரது பிடிவாத்தால் இவர் வீட்டிற்க்கு செல்லாமல் தொடர்ந்து இயக்கத்தில் இருந்தார்.
இப்படியான எவ்வளவோ சமபவங்கள் அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்திருந்த போராட்டமாக தமிழீழப் போராட்டம் இருந்தனெ கூறிக் கொள்வதில் மிகையாகாது.
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
குருதிச் சுவடுகள்.. .

புலனாய்வுத்துறை
கரும்புலி
லெப்.கேணல் பூட்டோ (சங்கர்)(NO:1)
கனகரட்ணம் ஸ்ரான்லியூயின்
பாலைக்குழி, அடம்பன், மன்னார்
வீரப்பிறப்பு: 23.05.1974
வீரச்சாவு: 11.08.2006
11.08.2006 அன்று யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவு.
இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த் தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி “கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?” என ஏசுகின்றார். “நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்” என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.
“அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என அனுமதி கேட்கின்றான். அன்னை மெளனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போக மாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்” என்றவன், ஒருநாள் இயக்கத்தில் இணைந்து விட்டான். உயிராபத்துக்களை உதாசினம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. “நீ வீட்ட திரும்பிப் போ” என கூறு கின்றார். “இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்”. என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் “ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக் கிட்டவன்” எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை “பூட்டோ” எனும் பெயருடன் தொடங்கியது.

காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்த மற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக் கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர் களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டிய படியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப் பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது,. இவர்களுடைய காட்டு முகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறி குறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பன வற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழி நடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.
முல்லைத்தீவுச் சமர் தொடங்கி விட்டது. “பூட்டோ… பூட்டோ!” என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வ தேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆக வேண்டும். முகாம் துடைத் தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான். இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணு வத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத் துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத் தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.
இப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக் குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப் புலிக்கு இராணுவமுகாமொன்றின் காவலர ணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப் பிற்குரிய செயற்பாடு ஆகும். தனது பாது காப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிது நேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர் களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம் முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமை யாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

‘ஜெயசிக்குறு’ இராணுவ நட வடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத் தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்திய மற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடி வெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர்.
கை என்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக் கப்பட, ஓயாத அலைகள் 2 வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.
மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.
இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்ட கலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர் களுக்கென ஒரு சாதாரண மீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குரனின் படகை வழிமறித்தன. பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதி யாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத்தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.
‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்பட லானான்.
பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்திய டைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.
சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘GPS’ ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்ட வாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும் புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிர தேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்குகளும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான்.
அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் “பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது” வென கேட்க “யாரு, “கரும்புலி பூட்டோவா!” என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.
அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்” என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.
தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.
மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளி களுக்கான ஒரு ” உதாரண புருசனை”” பட்டறி வால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த ஒரு “நம்பர் வண்” ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவ னது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.
குறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.
– தூயவன்-
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் ‘பூட்டோ’ என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முழுநீளத் திரைப்படம்
அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே.
தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார். பூட்டோ ‘கலையரசன்’ என்ற பேரில் கவிதைகள் எழுதினார். சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.
சக கரும்புலி வீரன் மேஜர் நிலவனுக்காக இவர் எழுதிய பாடலான ‘உணர்வின் வரிகள் வரையும் கோடு’ என்ற பாடல் அவற்றுள் முக்கியமானது.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

லெப்.கேணல் வீரமணி
சுப்பிரமணியம் வடிவேல்
பாவற்குளம், வவுனியா
வீரப்பிறப்பு: 12.07.1975
வீரச்சாவு: 24.05.2006
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: குடாரப்புப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவு.
சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.
வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.
மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று. சத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று. செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான். சிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.
ஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான். “மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.” “வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.” வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.
வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது. வீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.” இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா? மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள். ”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.
வீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான். இவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார். ஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள்! நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும். ஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான். கட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.” ஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது. நூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார். வீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான். இறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.” வெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.
வீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன? ஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்
விடுதலைப்புலிகள் ( ஆனி – ஆடி : 2006 )
| கேணல் ரமணன் | 21.05.2006 |
|---|---|
| பொறுப்பு / இயக்கப்பெயர் | மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் |
| இயற்பெயர் | கந்தையா உலகநாதன் |
| சொந்த இடம் | பழுகாமம், மட்டக்களப்பு |
| வீரச்சாவு | 21.05.2006 |
| விபரம் | “வவுணதீவு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளைப் மேற்பார்வை செய்து கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு.” |

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி
கந்தையா உலகநாதன்
பழுகாமம், மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 14.10.1965
வீரச்சாவு: 21.05.2006
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: மட்டக்களப்பு
வீரச்சாவு நிகழ்வு விபரம்: வவுணதீவு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளைப் மேற்பார்வை செய்து கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட குறிசூட்டுத் (சினைப்பர்) தாக்குதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: தாண்டியடி
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள்..
ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.
அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.
அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.
குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.
கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.
தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன்
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.
பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.
படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.
அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.
உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன.
ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.
தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.
அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.
கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.
போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.
நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார்.
கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.
அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.
மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.
சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும்.
பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
08.04.2006

தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக நின்று முனைப்புடன் செயற்பட்ட ஒரு தமிழினப் பற்றாளர் எதிரியின் கோரமான தாக்குதலுக்குப் பலியாகிவிட்டார். இந்த உன்னத மனிதரை இழந்து இன்று எமது தேசம் ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கின்றது.
திரு வ.விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். உயர்ந்த குணவியல்புகள் கொண்டவர். அனைவரையும் கவர்ந்து கொள்ளும் ஆளுமை படைத்தவர். தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு தேசப்பற்றாளர். இவரது இழப்பு தமிழர் தேசத்துக்கு என்றுமே ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.

தமிழீழத் தனியரசே தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். தமிழரின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்து, தமிழரின் நிலத்தையும் வளத்தையும் சூறையாடி, ஒட்டுமொத்தமாக தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்குடன் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனஅழிப்பு போரை இவர் முழுமையாக எதிர்த்து நின்றார். இந்த அழிவில் இருந்து தமிழீழ மக்கள் முழுமையாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதையே தனது குறிக்கோளாக வரித்துக்கொண்டார். வரித்துக்கொண்ட குறிக்கோளில் உறுதி தளராது, பாதை விலகாது பயணித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று, தமிழீழ விடுதலைப் போராட்டதிற்குப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்தார்.
இவரது வாழ்வு திருமலை மண்ணோடும் மக்களோடும் ஒன்றியதாக இருந்தது. இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமைக் குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார். சிங்களப் பேரினவாதிகளின் கெடுபிடிச் செயல்கள் ஒருபுறமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மறுபுறமுமாக தினம் தினம் எத்தனையோ நெருக்குதல்களையும் சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து நின்றபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான துணிச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார். திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இருந்து அந்த மாவட்டத்தில் தமிழ்த் தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெற்று, பலம்பெற்று வளர அயராது உழைத்தார். இவரது பெரும் பணி என்றும் பாராட்டுக்குரியது.
திரு வ.விக்கினேஸ்வரன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.
வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.