Saturday, October 31, 2026
Home இந்தியாNew Delhi40,000 கோடி ரூபாய்க்கு எட்டு அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்திய மத்திய அரசு ஒப்புதல்

40,000 கோடி ரூபாய்க்கு எட்டு அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்திய மத்திய அரசு ஒப்புதல்

by Amizhthu

கடற்படைக்காக, 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில், எட்டு அடுத்த தலைமுறை அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு கூட்டம் டில்லியில் நேற்று (அக்.,29) நடந்தது. இதில், 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் கடற்படைக்கு எட்டு அதிநவீன போர்க்கப்பல்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை மேற்கு வங்கத்தின், கொல்கட்டாவில் உள்ள, ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ், கோவா ஷிப்யார்டு லிமிடெட்’ ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கடற்படை மூத்த அதிகாரிகள் கூறியதாவது: ‘அடுத்த தலைமுறை கார்வெட்’ எனப்படும் இந்த போர்க்கப்பல்கள், தலா 2,000 டன் எடை கொண்ட அதிவேக கப்பல்களாக இருக்கும். மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்லும் திறன் கொண்ட இவை, எதிரிகளின் ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. கடற்படையே உருவாக்கியுள்ள இந்த வடிவமைப்பில், மேம்பட்ட கப்பல் கட்டுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்ட பணிகளுடன் எதிரி கப்பல்களை தாக்குதல், நீர்மூழ்கி கப்பல்களை எதிர்கொள்ளுதல், வான்வழி தாக்குதல்களை முறியடித்தல் போன்ற பணிகளில் இந்த கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், அதிக வேகத்தில் திசைமாறி செல்லும் திறன் ஆகியவை இந்த கப்பல்களின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும்.

இந்த திட்டத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே பெறப்படும்.முதல் கப்பலை 2030க்குள் கடற்படையிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Reply