மேகதாது அணை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க, திமுக ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இந்த தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் கர்நாடகா தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த முயற்சிக்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி திமுக ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. லோக்சபாவில் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கூறி திமுக பார்லி. குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை வழங்கி உள்ளார்.
நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ள விவரம் வருமாறு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் தன்னிச்சையான திட்டம், தமிழக விவசாயிகள் நலன்களுக்கு பெரும் பாதிப்பையும், கடும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். எனவே அவையின் மற்ற பணிகளை ஒத்தி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதரமாக விளங்கும் முக்கிய பிரச்னை குறித்து லோக்சபாவில் உடனடியாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டு உள்ளார்.
இதே போன்று ராஜ்யசபா திமுக குழுத் தலைவர் திருச்சி சிவாவும் மேகதாது அணை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை அளித்து இருக்கிறார்.