‘பாதுகாப்பு மையங்களில் உள்ள உலோக சிலைகள் எல்லாம், சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள புராதன உலோக சிலைகளை பாதுகாக்கும் வகையில், மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் சிலைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் வைக்கப்பட்டு உள்ள உலோக சிலைகளுக்கு, ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படவில்லை என்பதால், அவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்ப உத்தவிடக் கோரி, கோவையை சேர்ந்த சிவ பக்தர் டி.சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
சிலைகள் பாதுகாப்பு மையங்களில், ஆகம விதிகள்படி, பூஜைகள், சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்காக, சில மையங்களில், பிரத்யேக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், 1,881 கோவில்களில், சிலைகள் பாதுகாக்க தனி அறைகள் கட்டப்பட்டு வருகின்றன; 1,782 கோவில்களில் கட்டுமானம் முடிவடைந்துள்ளது; மீதமுள்ள, 99 கோவில்களிலும் கட்டப்பட்ட பின், பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு உள்ள உலோக சிலைகள், சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.