நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் டித்வா புயலால் 1216 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்க 778 வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சுற்றறிக்கைகள், உரிய படிவங்களுக்கு அமைவாக பொருத்தமான உத்தியோகத்தர்களால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 893 வீட்டுக்கூறுகள் இருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலாளர் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 1216 வீடுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கு 304 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துமூலமாக தெளிவுப்படுத்தி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களினது எண்ணிக்கை 1410, பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கை 4102,மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1190, டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1216, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 25000 ரூபா நிவாரண கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 778 ஆக காணப்படுகிறது.
அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் நெடுந்தீவு பிரதேசமானது சகல போக்குவரத்து மார்க்கங்களும் முடக்கப்பட்டதுடன், மின்சாரம் மற்றும் சகல தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன.இதனால் குறித்த நேரத்தில் வெள்ள இடரில் உடனடியாக கிராமங்கள் தோறும் சென்று சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது. இதனால் எமது புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையிலும், அனர்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் மாவட்ட செயலகத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.
இக்காலப்பகுதியில் நெடுந்தீவில் வசித்த சகல குடும்பங்களும் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளன. பாரிய பாதிப்புகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். இதனடிப்படையிலேயே குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.
தற்போது அனர்த்த நிவாரண சேவைகள்,நிலைய சுற்றறிக்கைகளுக்கு அமைய உரிய படிவங்களுக்கு அமைவாக பொருத்தமான உத்தியோகத்தர்களால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.



















