Table of Contents
மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலை குறித்து தூதரகம் அறிவிப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் தளம்பலான பாதுகாப்புச் சூழல் மற்றும் மாற்றங்கள் குறித்து அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் அங்கு வாழும் இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) விடுக்கப்பட்டுள்ள இந்த விசேட அறிவிப்பில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் உத்தியோகபூர்வமான மற்றும் நம்பகமான செய்தி மூலங்களை மட்டுமே பின்பற்றுமாறு தூதரகம் கோரியுள்ளது.
சவூதி அரேபிய அதிகாரிகள், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரக காரியாலயம் ஆகியவற்றினால் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கு அமையச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதை முற்றாகத் தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து அடையாள ஆவணங்களையும் அவசரத் தேவைகளுக்காகத் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரித் தேவைகளுக்காகத் தூதரகம் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய அவசரத் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:
அழைப்புகளுக்கு: +966 54 947 7567 அல்லது +966 56 982 2700
வட்ஸ்அப் (Whatsapp) அல்லது ஐ.எம்.ஓ (IMO) குறுஞ்செய்திகளுக்கு: +966 56 975 3380
மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
