Saturday, March 7, 2026

தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! – சீமான் எச்சரிக்கை

by

தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாலூரில் கேரள மாநில அரசு மலையாள மொழியில் எல்லை அறிவிப்புப் பலகை வைத்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டம் நடத்தி அகற்றிய நிலையில், நேற்று மீண்டும் கேரள அரசு அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாலூர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அவ்விடம் வரை தங்களுக்கு சொந்தமானது என்றுகூறி கேரள மாநில அரசு மலையாள மொழியில் அறிவிப்பு பலகையை வைத்தது. தமிழக எல்லையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அப்பலகையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியதோடு, தமிழ்நாட்டின் எல்லையை காக்கத் தவறிய திமுக அரசை கண்டித்துக் கடும் எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தது.

கேரள அரசு மீண்டும் அகற்றப்பட்ட அறிவிப்பு பலகையை வைக்க முயன்றபோது, நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் விழிப்படைந்த தாலூர் மக்களும் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராடி அதனை வைக்க விடாமல் மண்ணுரிமை மீட்டனர். அதன்பிறகு நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரிகள் அவ்விடத்தை அளந்து, அது கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தமிழகத்தின் எல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அதனையடுத்து கேரளா தனது ஆக்கிரமிப்பு முயற்சியைக் கைவிட்ட நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் கேரள அரசு தமிழக எல்லைக்குள் அறிவிப்பு பலகையும் பேருந்து நிலையமும் அமைக்க முயன்றதையும் நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தியது.

banner

இந்நிலையில், நேற்று மீண்டும் தமிழக எல்லைக்குள் தமிழ்நாடு அரசு தமிழில் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்பு பலகையை அத்துமீறி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள மாநில அரசு கேரள காவல்துறையினரை குவித்து, தமிழக எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்பு பலகையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு எல்லை பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்துகின்றது. தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்க திறனற்ற திமுக அரசு போராடும் நாம் தமிழர் கட்சியினரை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதுதான் திமுக அரசு மண்ணையும், மானத்தையும் காக்கும் முறையா?

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஒரு மரத்தைக்கூட வெட்ட அனுமதிக்காத கேரள மாநில அரசு, எந்தக் காலத்திலும் எவராலும் உருவாக்க முடியாத இயற்கையின் அருங்கொடையான தமிழ்நாட்டின் மலைவளத்தை கனிம வளங்களாக கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் வெட்டி ஏற்றப்படுவதை திமுக அரசு தடுத்து நிறுத்தாதது ஏன்? கேரளாவிலிருந்து தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் குப்பைகளும், மருத்துவக்கழிவுகளும் கொட்டப்படுவதையும் திமுக அரசால் தடுக்க முடியாதது ஏன்? மின்னிலக்க அளவீடு (டிஜிட்டல் சர்வே) என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு சொந்தமான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை கேரள எல்லைகளாகக் குறிப்பிட்டு அத்துமீறி எல்லைக்கல் நிறுவியபோதும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தது ஏன்? முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்ற தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதை திமுக அரசு தட்டிக்கேட்காது ஏன்? திமுக கூட்டணி கட்சிகள் ஆளும் கேரள அரசிடம் குறைந்தபட்ச பேச்சு வார்த்தைகூட திமுக அரசு நடத்தாது ஏன்? காங்கிரசிடமும்,

கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தேர்தலில் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதற்காக பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி கடும் பேரத்தில் ஈடுபடும் திமுக, அதில் அணுவளவு அக்கறையும் தமிழ்நாட்டின் உரிமையை மீட்கும் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் காட்டாதது ஏன்? இதுதான் தமிழ் மண்ணின் மீதும், மக்களின் மீதும் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா?

தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால அவல ஆட்சியில்தான் கண்ணகி கோட்டத்தின் நில உரிமையையும், முல்லைப் பெரியாற்று நீர் உரிமையையும் கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது. இன உணர்வும், மான உணர்வும் அற்ற இரு திராவிடக் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் விளைவே, தற்போது தமிழக எல்லையை தங்கள் எல்லைகளாக குறிப்பிட்டு அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் துணிவை கேரள மாநில அரசிற்குக் கொடுத்துள்ளது. இனியும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியை கேரளாவிற்கு தாரைவார்க்குமானால் அது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.

ஆகவே, நீலகிரி மாவட்டம் தாலூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லை பலகையை உடனடியாக அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை உடனடியாக நிறுவ வேண்டும். இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கேரள அரசிடம் கடும் எதிர்வினை ஆற்றிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

உடனடியாக, கேரள அரசின் அறிவிப்புப்பலகை அகற்றப்படாவிட்டால் கூடலூர் மக்களைத் திரட்டி மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி தாலூர் எல்லையில் முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00